உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

203

உயிரை ஆய்ந்த பெருமக்கள் உடலையும் நன்கு ஆய்ந்தனர். உடல் என்னும் பெயரால் உழலுதலுக்கு-துன்புக்கு-இடமானது என்றும் தேர்ந்திருந்தனர். இருபதில் எழுச்சியும், முப்பதில் முறுக்கும், நாற்பதில் நழுவலும், ஐம்பதில் அசதியும், அறுபதில் ஆட்டமும், எழுபதில் ஏக்கமும், எண்பதில் தூக்கமும் எய்தும் எனப் பொது நிலையில் கணித்தும், 'நூறுவயது அல்லது இல்லை' என்று பொது நிலையில் குறித்தும் வைத்தனர். அழியும் உடலைக் கொண்டே அழியா நிலையைப் பெறக் கூடுமே யன்றி, உடலை விடுத்து அடையக் கூடாமையின் உடலுக்கு 'மெய்' என்று பெயரிட்டனர். நிலையாமைக்கு இடமாம் வாழ்வை நிலைக்கச் செய்வது பிறப்பின் பேறு ஆகலின் 'மெய்' என்று பெயரிட்டது தகவேயாம்! இதனை, மங்கல வழக்கெனக் கொள்வார் கொள்ளினும், உடலின் மெய்ந்நிலை கண்டு வைக்கப்பெற்ற பெயரே ஈதெனக் கொள்ளல் முறையாம்.

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே”

என்னும் புறப்பாட்டு இதனைத் தெளிவிக்கும். நிலையாமை சுட்டும் இலக்கண இலக்கியச் செய்திகள் எல்லாம் பிற்காலப் போலித் துறவோர் கூறுவது போல, ஒப்பாரிப் பாட்டும் அன்று! புலம்பலும் அன்று! அழுகுணிச் செய்தியும் அன்று! அழியும் வாழ்வைக் கொண்டு அழியாப் பேற்றை அடைதற்கு வலியுறுத் திக் கூறிய வாய்மொழிகளேயாம். சாவா உடம்பினவர் என்றும், "உளதாகும் சாக்காடு" என்றும் மேலோர் ஆட்சிகள் உண்மை இதனை வலியுறுத்தும்.

இனி அந் நாளில் பிறர் பிறர் அறிவு ஐந்தின் மேல் இல்லை என்றாராக, ஆசிரியர் தொல்காப்பியனார். 'ஆறாம் அறிவு உண்டு' என ஆய்ந்து கூறியமை அருமைப்பாடு உடையதாம். மூலநூல் அவ்வாறு கூறியும், வழிநூல் செய்த நன்னூலார் ஐயறிவு அளவுடன் அமைந்தது அவர்மம் சமயக் கொள்கையில் நின்று உரைத்ததேயாம்!

உயிரியல் ஆய்வு இவ்வாறாக மெய்கண்டார் உயிர் உண்மையை வலியுறுத்த மேற்கொண்ட மேற்கோளைக் காணலாம். உயிர் உண்மையை வலியுறுத்துவதற்கு அவர்,ஆழ்ந்து அகன்று நுணுகிச் செல்கிறார். உடலின் தோற்றரவை உரைத்து அதன் கண் உயிர் உறைகலை ஏழு வகையாகப் பகுத்துக் காட்டித் தெளிவிக்கிறார். அவர் கூறும் மூன்றாம் நூற்பா :