உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

இளங்குமரனார் தமிழ்வளம் 37

-

"உளதுஇல தென்றலின்; எனதுடல் என்றலின்;

ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின்; கண்படில் உண்டிவினை இன்மையின்; உணர்த்த உணர்தலின்; மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா”.

'ஆன்மாவின் இருப்பிடம் இது' என்றும், 'ஆன்மா இருப்பை அறியும் வகை இவை' என்றும் இந் நூற்பாவில் உரைக்கிறார். மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா :

ஆன்மா என்பது உயிர். அதனை ஆதன் என்றும் கூறுவர்; ஆதன் எங்கே உள்ளது? "மாயா இயந்திர தனுவினுள் உள்ளது”. அதாவது, பொறிகளின் கூட்டத்தால் அமைந்த இவ்வுடலுக்கு முதற் காரணமாக இருப்பது மாயையாம். மாயையின் செயலால், பொறிகளையுடைய உடல் வாய்த்தது. அவ் வுடற்கண் ஆதன் உள்ளது என்பது இத் தொடரின் பொருளாம். இயந்திரம் பொறிகள்; தனு = உடல்.

=

'இவ்வுடலே ஆன்மாவோ' என ஐயுறுவார்க்கு அல்லது கொள்கையாக உடையார்க்கு-இவ்வுடல் ஆன்மா அன்று; உடலினுள் வேறாக ஆன்மா உண்டு என்றார். உடற் பொறியே ஆன்மா எனின் பிணத்திடத்தும் கூட உடற்பொறி உண்டன்றோ! உயிரின் அறிவு விருப்பு செயல் அப் பிணத்தில் இல்லையே! ஆதலால் பொறிகளின் வேறானதே ஆன்மாவாம் என்றார். ஆன்மா உளது :

இந்நூற்பாவின் இறுதியில் நிற்கும் சொல் 'ஆன்மா; முதற் கண் நிற்கும் சொல் 'உளது'; இரண்டும் இணைய, 'ஆன்மா உளது' என்னும் முடிநிலை வரும். வில்லை வளைத்து அதன் முடியையும் அடியையும் நாணாற் பூட்டி வைத்தாற் போன்ற அமைப்புடையது இது!

அந்தம் ஆதியாம் இறைமையைச் சுட்டியுரைத்த ஆசிரியர், உயிருக்கும் முடிவின்மை யறிந்து அல்லது அழிவிலா வட்டச் சுழற்சியறிந்து அமைத்துக்கொண்ட அமைப்பு எனக் கொள்ளினும் கொள்ளத் தக்கதாம். இனி, இவ்விறுதி முதல் இணைப்பை, ஒவ்வொரு கருத்துத் தொடரொடும் இணைத்துக் கொண்டு சொற்சுருக்கிப் பொருள் பெருக்கி கொண்டமை மெய்கண்டார் யாப்பறி மேதகைமையை வெளிப்படக் காட்டுவதாம். இணைப்பு அழகை இனிது காண்க.