உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

37

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

ஐந்துநிலை மாடத்தில் ஏறும் ஒருவன் மாடந்தொறும் நின்று நின்று ஏறியும்,நின்று நின்று இறங்கியும் காணும் காட்சிபோல மேலால் நிலை, கீழால் நிலைகளைத் தெளிக. இந் நாளில், மாடிதோறும் நின்று நின்று இயங்கும் தூக்கி (Lift) யுண்மை தக்க எடுத்துக்காட்டாம்.

அரசன், படைத்தலைவர் முதலானவர்களோடு கூடி உலாப்போந்து மாளிகை புகும்போது வாயில்கள்தோறும் அவரவர்களை நிறுத்தி, காவலும் வைத்து அந்தப்புரத்தினில் தனியே செல்வதைப் போல ஆன்மா உடலின் அகக் கருவிகளில் இருந்து நீங்கி உயிர்க் காற்றைக் காவலாக நிறுத்தி ஐந்துநிலை கொள்ளும் என்று முன்னை உரையாளர்கள் விளக்குவர்.

உயிர் அகக்கருவிகளில் படிந்து படிந்து செல்லுதலைத் தென்றல் காற்றொடும் இணைத்துக் காண்டலும் இன்பம் பயப்பதாம்.

தென்றல் சோலையில் நுழைந்து, குளத்துள்புகுந்து, தாமரை மலரைத்தழுவி, இருள்வாசி மல்லிகை முல்லை மலர்ப்பந்தர் களில் தாவி, தேனும் மணமும் நுகர்ந்து, தண்மை மென்மை நறுமையுடையதாய் அறிவன்போல் (ஆன்மாபோல்) இயங்கும் என்பதாம்.

ஆதன், ஓர்ப்பன், அறிவன் என்னும் பெயர்கள் ஆன்மாவுக் குரியன என்பதை உணர்வார், 'அறிவனபோல் இயங்கும் தென்றலை' மேலால்நிலை, கீழால்நிலை உயிர் இயக்கங்க ளொடு ஒப்பிட்டு மகிழ்வர்.

தேனீ, வண்டு, தும்பி முதலியவை மலர்தொறும் அமர்ந்து தேன் நுகர்தல் போன்றது, உயிரின் கீழால்நிலை, மேலால்நிலை என்பவை என எண்ணி இன்புறலாம்.

இந்நூற்பாவினால் ஆன்மா மனம் முதலிய அகக் கருவிகளுள் ஒன்றன்று என்றும், அவ்வகக் கருவிகளொடு கூடிநின்று கடனாற்றும் தன்மையது என்றும், அதுதன் தொல்பழ மலத் தொடர்பால் தானே அறிதல் இன்றி, அகக்கருவிகளின் துணை கொண்டு அறியும் என்றும், அது மேலால்நிலை கீழால் நிலை என்னும் நிலைகளில் ஏறி இறங்கி நிற்றல் அமைச்சர்களோடு அளாவி நிற்கும் அரசன்நிலை போல்வது என்றும் அறியப்பட்டதாம்.

ஐம்பூதம், ஐம்பொறி, ஐம்புலன், ஐந்துநிலை என்பவற்றின் ஒழுங்கு நிலையும் எண்ணத்தக்கதேயாம். ஐம்பேரவைக்கும் ஐம்பேரமைச்சிருந்த பண்டை ஆட்சிநிலையும் அறியத்தக்கதே.

J