உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் நூற்பா

உயிர்க்கு ஓர் இயல்வு. 'சார்ந்ததன் வண்ணமாதல்' என்பது. உயிர் எப்பொருளில் அல்லது எச்சூழலில் தோய்ந்தும் படித்தும் நிற்கிறதோ அதற்குத் தகத் தன்னை அமைத்துக் கொண்டிருத்தல் பொது விதியாம். அருவிச் சூழலை அடுத்துச் செல்வார் அகங் குளிர்ந்து அக்காட்சியில் தோய்தலும், அனற் கொதிப்பினை அடுத்து இருப்பார் அவ்வெப்புக்கு ஆட்பட்டு வெதும்புதலும் அறியாதவை அல்லவே!

மலர்க்காவில் இருப்பார் மகிழ்வும் மழலையர் மையத்தில் எய்தும் திளைப்பும் மற்றை மற்றை இடங்களில் எய்துவது உண்டோ? சார்ந்ததன் வண்ணமாதல் என்பதன்றோ இதன் அடிப்படை?

அறிவு நிலையில் வளர்ச்சியில்லாச் சிற்றறிவுயிரிகளும் தங்கள் உயிர்ப் பாதுகாவல் பொருட்டுச் சார்ந்த இடத்தின் வண்ணத்தைத் தமக்கெனக் கொண்டிருத்தல் கண்கூடாகக் காண்பார், அதன் உண்மை அறிவர். பளிங்குபோல விளக்குவது எது, சார்ந்ததன் வண்ணமாதலை?

சார்ந்ததன் வண்ணமாதல் உயிர்க்கு உண்மையை அறிவார். உயிர் உலகறிவிலே தோய்ந்து கிடக்கும்போது அதே அறிவும் பொருளாகவும், இறையறிவிலே தோய்ந்து கிடக்கும் போது அதே இறையறிவுப் பொருளாகவும் ஆகின்றது என்பதைத் தெளிவர். இத்தெளிவு இந்நூற்பாவின் விளக்கத்திற்குத் துணையாய் அமையும்.

யாவையும் சூனியம் சத்தெதிர் (சத்து எதிர் யாவையும் சூனியம்) :

சத்தாகிய இறையின் முன்னே எல்லாப் பொருள்களும் இல்லாப் பொருள்களேயாம் என்பது இத்தொடரின் பொருள்.

படைப்பாளி ஒருவனுக்குத் தான் படைத்த படைப்புப் பொருளின் உண்மைநிலை தெரியாமல் போகாதே! அவன்முன் பொய்ப்பொருள் மெய் பொருளாகவோ, போலிப்பொருள் உண்மைப் பொருளாகவோ தோன்ற முடியாதே! தேர்ந்த