உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

இளங்குமரனார் தமிழ்வளம்

37

வழக்காடிமுன் பொய்மைத் திரை கிழிபடல் காண்பார், இறைமுன் பொய்மை நிலைபெறும் என்பாரோ?

சிற்பி ஒருவன் ஒரு கல்லில் நாயுருவை வடிக்கின்றான். வடித்த அவனுக்குத் தான் வடித்த நாயுரு 'கல்' என்பது தெரியாதோ? மற்றையோர்க்கு நாயாகத் தோன்றக்கூடும். வடித்த சிற்பிக்கோ கல்லென்பது திட்டமாகத் தெரிந்த பொருளேயாம். மற்றையோர் அதனை நாயாகக் கருதினாலும், அவன் கல்லாகவே காணுகின்றான். இதனையே, "நாயைக்கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்" என்னும் பழமொழி சுட்டுகின்றது. இதனை அறியாராய் 'நாய்க்கடிக்கும் கல்லடிக்கும்' இப்பழமொழியை வழங்கி வருகின்றனர்.

இனிர் திருமூலர், மரத்தில் செதுக்கப்பட்ட யானையைச் சுட்டி இதே கருத்தை வலியுறுத்துகின்றார்,

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தின் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே. என்பது அது (திருமந். 2290)

யானையாகக் காணும்போது மரம் என்பது தெரிய வில்லை. மரமாகக் காணும்போது யானை என்பது தெரிய வில்லை. பூதங்களாகக் காணும்போது இறைமை தெரியவில்லை; இறைமையாகக் காணும்போது பூதங்கள் தெரியவில்லை என்பது இதன் பொருளாம். இக்காட்சி உயிர்களின் காட்சியாம். ஆனால், இறையின் முன் சார்ந்ததன் வண்ணமாதல் இல்லையே! மெய்ப் பொருளின் முன் பொய்ப்பொருள் மெய்ப்பொருளாகத் தோற்றங் காட்டமுடியுமோ? ஆகலின், சத்தெதிர் யாவையும் சூனியம் என்றார். சூனியும் இவண் இன்மையைக் குறிக்காமல் நிலை பேறின்மையைக் குறித்ததாம்.

ஆகலின், சத்தே அறியாது :

ஆதலால் இறை பொய்ப்பொருளை மெய்ப்பொருளாக மயங்கக் கொள்ளாது என்பது பொருள். சொல்லிய இதனால் ஆன்மா மயங்கக் கொள்ளும் என்பதையும் வெளிப்படுத்தினார். இனி, உலகியற் பொருள்கள் தாம் இறையை அறியுமோ என்று வினவுவார் உளராயின், அவர்க்கு விடையாக 'அசத்து இலது அறியாது' என்றார்.