உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

233

அஞ்செழுத்தே விதி' எனப் பகுத்துப் பொருள் காண்டல் வேண்டுமாம்.

ஊனக் கண் உணரா பதியை : (பதியை ஊனக் கண் உணரா)

ஊனம் = உடல்; குறையுடையது; கண் = அறிவு; குறை யுடைய உடலொடு பொருந்திய கண்ணால் அறியும் அறிவு இறையை அறியமாட்டா கண் என்பது கண்ணாற் பெறும் அறிவைக் குறித்ததாயினும், ஏனைப் பொறிகள் வழியாகவும் பெறும் அறிவுகளுக்கும் பொதுவாக நின்றதாம். பதியை அல்லது இறையை உயிரறிவாம் இயற்கை அறிவால் பெற இயலாது என விலக்கினார். மூவகை அறிவுகளுள் உயிரறிவு இறையை அறிவிக்கமாட்டாது எனத் தீர்த்தார். முகத்துக் கண்ணால் காணாவொண்ணாததை அகத்துக் கண்ணால் கண்டு களிக்க என்பார் திருமூலர் :

"முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய

சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே”

என்றார் அவர் (2944).

இனி, உலக அறிவால் பதியைக் காணமுடியுமோ என்பார்க்கு அதனாலும் இயலாது என்றார்.

பாசம் உணரா பதியை :

பாவமாவது உலகு. உலக அறிவாலும் இறைவனை உணர முடியாது. பாச அறிவாவது உலகு பற்றிய கல்வி. கேள்வி ஆய்வுகளாம். உயிரறிவால் காணப்பட்ட நூல்களும், பின்னே பாச அறிவாய் அமையும். உயிரறிவாலேயே காணவொண்ணாப் பதி உலக அறிவால் காணக்கூடுவன் என்பது அறவே இயலாததாம். ஆகலின் 'பதியைப் பாசம் உணரா' என்றார். உலக அறிவு, உயிரறிவுக் கூறுகள் பலவாகலின் 'உணரா' எனப் பன்மையிற் கூறினார். 'கற்பனவும் இனி அமையும்' என்றார் தாயுமானவர்.

"நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்”

என்பது திருக்குறள். நூலறிவை, உண்மை அறிவே விஞ்சும் என்றால், உண்மை அறிவாலேயே உணரமாட்டாப் பதியை நூலறிவு உணர்த்தாது அன்றே!