உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

இளங்குமரனார் தமிழ்வளம்-37

செய்வார் நிறைநிலைக்கு என்றும் எடுத்துக்காட்டாய் இலங்கத் தக்கவர்களாம்.

அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாதற்கு,

“சீவனெனச் சிவ னென்னவே றில்லை

சீவ னார்சிவ னாரை அறிகிலர்

சீவ னார்சிவ னாரை அறிந்தபின்

சீவ னார்சிவ னாயிட் டிருப்பரே”

என்னும் திருமந்திரப் பாடலை ஒப்பிட்டுக் காண்க.

என்கடன் பணிசெய்து கிடப்பதே எனக் குறிக்கொண்டு உழவாரப்படை ஏந்தி உறுபணி செய்த நாவுக்கரசர் இறைபணி செய்யும் படிமான வளர்ச்சியைச் சுட்டிக்காட்டும் அருமை திருப்பாட்டு இவண் அறியத்தக்கதாம்.

“விளக்கினார் பெற்ற இன்பம்

மெழுக்கினாற் பதிற்றி யாகும்

துளக்கில்நன் மலர்தொ டுத்தால் தூயவிண் ணேற லாகும்

விளக்கிட்டார் பேறு சொல்லின்

மெய்ந்நெறி ஞான மாகும்

அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளு மாறே”

என்பது அது.

இப்பத்தாம் நூற்பாவில்,ஆன்மா இறைவனும் தானும் ரண்டலா நிலையை உணர்ந்து, எல்லாம் அவனே என்றும் எச்செயலும் அவன் செயலே என்றும் கொண்டு இறைபணியில் தலைப்பட அதற்கு மலம் மாயை என்பவை இல்லையாய் ஒழியும் என்று கற்பித்தார் ஆசிரியர்.