உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினொன்றாம் நூற்பா

திருவருளால் தன்னையுணர்ந்து, பின் தலைவனையுணர்ந்து, 'அவனே தானே' என ஆகிய ஆன்மா, தலைவன் திருவருளை நினைந்து நினைந்து அன்பில் முருகி முருகி அவனடி அடைதலையே குறியாகக் கொள்ளும் என்பதை இந்நூற்பாவில் ஆசிரியர் குறிக்கின்றார்.

ஒரு சிறிய உதவி ஒருவர் செய்தாலும் அதனைப் பெறுவார் 'நன்றி' எனக் கூறுவது 'நாகரிகம்' என்பது நானிலப் பொதுச் செய்தி.

தாய் தந்தையர் செய்த நன்றிக்கு எத்தனை எத்தனை பிறவிகள் எடுத்துக் தொண்டு செய்தாலும் ஈடாகமாட்டாது என்பது நயனறிந்தோர் உரை.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு; ஆனால் செய்ந்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை என்பது பொய்யாமொழி

ஒழுக்கத்தில் தலையாயது 'நன்றியறிதல்' என்பதை ஒழுக்க நூல்கள் சுட்டுகின்றன. இவ்வாறாக, இறைவன் செய்தருளும் நன்றிகள் இவ்வளவு அவ்வளவு என்று வரையறுத்தற் குரியவோ?

எண்ணெய் விளக்கோ ஆவி விளக்கோ மின் விளக்கோ ஆகட்டும், திரி விளக்கோ பொறி விளக்கோ ஆகட்டும், எவ்விளக் காயினும் கைக்காசு செலவிடாமல் கைக்கு வந்துவிடுமோ? அவை ஒளி செய்வதற்கென உரிய செலவு இல்லாமல் முடியுமோ? மாந்தன் படைத்த ஒளி விளக்குகளின் நிலைமை இவ்வாறு இருக்க, இயற்கை தந்த ஒளிவிளக்குகளின் நிலைமை என்ன? கோடி கோடி விளக்குகளை ஒருங்கே கொளுத்தி வைத்தாலும் ஒரு சிறு கோடிக்குக்கூட வாராத பேரொளிப் பிழம்பாம் திங்கள், ஞாயிறு, விண்மீன் ஆகியவை ஒளி வெள்ளப் பாய்ச்சு தலை அறிவோம் அல்லவோ? ஒரு சல்லிக் காசேனும் நாம் செலுத்துவது உண்டோ? 'கெடு(தவணை)' கடந்து விட்டது என்பதற்காகத் தொடர்பைத் துண்டித்தல் உண்டோ? பொறிக் கோளாறு என்று செயலற்றுப் போய்விட்டதுண்டோ? இவ்வியற்கைக் கொடையை எவ்வாறு நெஞ்சார நினைந்து போற்ற வேண்டும்?