உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

247

அகற்றல் வேண்டும். இவற்றைத் தெளிவிக்க விரும்பும் ஆசிரியர் ‘கழீஇ' என்னும் அளபெடைச் சொல்லாட்சியைப் படைத்துக் காட்டுகிறார். எடுத்தல், பொறுக்கல், துடைத்தல், கழுவல் என்பவை ஒன்றின் ஒன்று தூய்மையுறுத்தலில் விஞ்சிச் செல்லல் அறிக. பல்கால் கழுவல் என்பது சுட்டும் 'கழீஇ' என்பதோ மேலும் விஞ்சல் கொள்க.

அன்பரொடு மரீஇ :

முன்னை நூற்பாவிலேயே 'அயரா அன்பைச் சுட்டினார் ஆசிரியர். 'அன்பலால் துணையும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே' என்றார் நாவரசர்! அன்பே துணையாய் அமர்ந்த அரனடி அடைய, அன்பரொடு மருவுதல் வேண்டும் என்பது சொல்லா மலே அமையும். அயரா அன்பு ஆதனுக்கு வேண்டும் என்றவர், அன்பரொடு மருவுதலும் வேண்டும் என்றார் இந் நூற்பாவில்.

மருவுதல் கலத்தல்; நினைவிலும். சொல்லிலும், செயலிலும், கூட்டுறவிலும், வழிபாட்டிலும் எல்லாம் எல்லாம் அன்பரொடு மருவுதல் வேண்டும் என்றார். அக்கலப்பின் அருமை தோன்றுமாறே 'மருவுதல்' என்று கூறினார். இரண்டற்ற நிலையில் இயைவதே மருவுதலாம். 'மருவு இனிய காதல் மனையாள்' என்பதில் மருவுதல் பொருளருமை புலப்படும்.

'மரு', மணம் என்னும் பொருளது. மருதோன்றி, மருக் கொழுந்து மருந்து என்பவற்றில் மணமுண்டு. மருமகன், மருமகள், மருவீடு என்பவற்றில் மணம் உண்டு. இங்கே சொல்லிய கலப்பு மணக்கலப்பு;' அடியார் அன்பர் இடத்து மருவுதலோ 'மனக்கலப்பு.'

அன்பின் திறமும், அன்பரொடு மருவுதல் திறமும் ஒருங் கறிந்த வள்ளலார், அன்புருவாம் இறைவனை அன்பாலேயே அகப்படுத்த இயலும் என்பதைத் தெள்ளமுதம் அள்ளுறிச் சுரப்பது போலத் தீந்தமிழில் பாடினார்:

"அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே! அன்பெனும் குடில்புகும் அரசே!

அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே!

அன்பெனும் கரத்தமர் அமுதே!

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே!

அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே!