உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

249

வள்ளுவர். அவர், ஆய்ந்து அறங்கூறி நெறிப்படுத்தவந்த திறவோர். இவரோ, இறையடிப்பேறு எய்தும் வழி கூறவந்தவர். இவருக்கு, அவ்வாய்வு கருத்தன்று; ஆகலின் 'மாலற நேயம் மலிந்தவர் வேடம்' என்றார்.

எனினும், எவரையும் நம்பி ஏமாறுதல் கூடாதே என்று அருளுள்ளம் கொண்டோராய். மிகக் கருத்தாகப் பொய் வேடத்தாரை விலக்குமுகத்தான் "மாலற நேயம் மலிந்தவர் வேடம்" என்றார். அவரிடை 'வஞ்ச மனத்தான்' செய்கை வந்தொளியாதன்றே!

இறைவன் அடியாரை, இறைவனாகக் கொள்ளவேண்டும் என்பது சிவநெறிக்கு மட்டுமோ உண்மைச் செய்தி! உலகச் சமயங்கள் எல்லாவற்றுக்கும் பொதுச் செய்தி அல்லவோ! மெய்கண்டார். சிவநெறிச் சார்பாளர் என்னும் ஒன்றைக் கருதாமல், அவர்தம் கருத்தை மொழிபெயர்த்தால் எச்சமயத் தார்க்கும் பொருந்தும் பொதுமைநலம் உடையதேயன்றோ! ஆகலின் சமயச் சால்பையே அருளினார் என்பது சாலும்.

இனி, அடியார் கூட்டுறவும், அடியார் வேடமும் குறித்த ஆசிரியர், தெய்வத்திருக் கோயில்களையும் சுட்டி நூலை நிறைவு செய்வாராயினார்.

ஆலயம் தானும் அரனெனத் தொழுமே :

ஆலயம்

=

திருக்கோயில். திருக்கோயிலும் திருமதிலும் திருக்கோபுரமும் கல்லும் மண்ணும், மணலும், மரமும், செங்கலும், சுண்ணமும், வண்ணமும் என்று கருதுவார் கருதுக. ஆயின், ஆக்கப்பட்ட பொருளால் அவை அத்தகையவாயினும் அவற்றை ஆக்கியோர், ஆக்கத் தூண்டினோர், ஆக்கியதன் பயன் கொள்வோர் கல்லும் மண்ணும் பிறவும் என்றோ கருதுகின்றனர்? இறைவன் என்றே கருதி 'இறைப்பணி' தலைப்பட்டு நின்றனர். ஆதலால் "ஆலயத்தையும் அரனென்றே வழிபடுக" என்றார். திருக்கோபுரம் கண்ட அளவானே, தொழுதெழுந்த தொண்டர் பெற்றியைப் பெரிய புராணத்து அறிக.

பிறந்த மண்ணைப் பிரிந்து வேற்றூர் சென்ற மங்கை ஒருத்தி, பிறந்த மண்ணில் காலடி வைக்கின்றாள். வைத்தவுடன் வீழ்ந்து வணங்குகிறாள்! இது நேரில் கண்ட காட்சி; அவள் மண்ணை மண்ணாக மட்டுமோ நினைத்தாள்? அவள் அதில் தெய்வத் திருக்கோலம் கண்டல்லவோ வணங்கினாள்!