உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

13

இருந்தார்! ஆனால், நம்பு மதத்தவரும், இவர் 'நம்பாமதத்தர்' என்று எண்ணுமாறு மெய்யுணர்வில் ஓங்கி நின்றார்! தாயுமானவர் சொல்லவில்லையா? "இறைவா, நான் உனக்குப் பூசை செய்யேன்; உன்னை ஒரு வடிவாக நினைத்து வழிபடு வதற்காக மலரைப் பறிக்கச் சென்றால், அம்மலருள் நீயே இருக்கிறாய்! ஆதலால், நீ உறையும் பூவைப் பறித்து நின்னை வழிபட விரும்பாமல் அப்பூவைப் பறிக்காது விட்டேன். பூவில்லாமலே நின்னை வணங்கலாம் என நினைத்துக் கைம்மலரைக் குவிக்க எண்ணினேன். அப்பொழுது எனக்கு நாணுதல் உண்டாகியது! ஏனெனில், நீ என்னுள் இருக்கிறாய்? உள்ளே இருக்கும் உன்னைப் புறத்தே வழிபட்டு ஆவதென்ன என்னும் குறிப்புத் தோன்றியது; அன்றியும், நான் மட்டுமா இருக்கிறேன்; நீயும் என்னோடு தானே இருக்கிறாய்? நீயும் நானுமாக உள்ளே இருக்க, உன்னை நான் வணங்குவது முழுக் கும்பிடு ஆகாதே! அரைக் கும்பிடுதானே ஆகும்! ஆதலால் நின்னை வணங்குதல் தவிர்ந்தேன்" என்கிறாரே அவர்! இந் நிலையில் சிவவாக்கியர் சொல்கிறார்:

"அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வ துண்மையே!”

என்றும்,

“எண்க லந்த ஓசனோ டிசைந் திருப்ப துண்மையே!’

என்றும் “எனக்குள் நீ உனக்குள் நான்" என்றும் இறைவன் தம் உள்ளகத்து அமர்ந்தும் இசைந்தும் இருப்பதைச் சொல்கிறார். அத்தகையருக்கு மலர் எதற்கு? மந்திரம் எதற்கு? கோயில் குளம் எதற்கு?

விண்ணில் நின்று மின்னல் எழுந்து அம் மின்னல் அங்கேயே ஒடுங்குவது போல உள்ளத்துள் இறைவன் தோன்றி அங்கேயே ஒடுங்கியுள்ளானாம்! கண்ணில் பட்டுக் கண்ணில் தோன்றும் காட்சியைக் கண், தானே அறிந்துகொள்ளாதது போல, என்னுள் நின்ற இறைவனை என்னை அறியுமுன் யானும் அறிந்திலேன் என மேலும் விளக்குகின்றார். அன்றியும், இறைவனை மட்டும் உள்ளகத்துக் காணவில்லையாம்! பூவும் நீரும் அவர் மனமாம்! பொருந்து கோயில் அவர் உளமாம்! உயிரே இறையுருவாம்; ஐம்புலன்களும் 'தூப தீபங் களாம்; அங்கே கூத்தன் அந்தி சந்தி இல்லாமல் ஆடிக் கொண்டிருக்கின்றானாம்! இத்தகைய அகவழி பாட்டுச் சிவவாக்கியர்க்குப் புறவழிபாட்டுக் கோலங்கள் என்ன

வேண்டியிருக்கின்றன?