உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

15

அல்லது தீயுள் போடுவார்! இந்தப் பொய்யாம் உடலின் நிலைமையை என்னவென்று சொல்வது?" என்கிறார். மேலும்,

"மாடு கன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே மாட மாளி கைப்புறத்தில் வாழு கின்ற நாளிலே

ஓடி வந்து காலதூதர் சடுதி யாக மோதவே

உடல்கி டந்து உயிர் கழன்ற உண்மை கண்டும் உணர்கிலீர்” என்றும் உடலின் உண்மை நிலையை விளக்குகிறார்.

உடற் குறை இன்னதென உரைப்பது ஒப்பாரி வைப்பதற் காகவோ? நிலையாமையைக் கூறுவது நெட்டுயிர்த்து அழுவதற் கோ? இல்லை! உடலின் குறையையும் நிலையாமையையும் உணர்ந்து என்ன செய்யவேண்டுமோ அதை முன்னமே செய்து முடித்தற்குத் தூண்டவே யாம்!

உடல் நலம் பேணல்

உடலின் நிலையாமையைக் கூறிய சிவவாக்கியர் உடலைப் பேணிக்கொள்வது பற்றியும் உரைக்கிறார்;

"ஓடம் இருக்கும்போது தானே கடலில் ஓடி உலாவ முடியும்? அந்த ஓடம் இருக்கும்போதுதானே மீன் பிடிப்பார் பிடிக்கவும், முத்தெடுப்பார் எடுக்கவும், உலா வருவார் வரவும் முடியும்; ஓடம் உடைந்து போனால் எல்லையற்ற கடலில் துடுப்புத்தள்ளலும் இல்லை, துடுப்பும் இல்லை: துணைக்கும் யாரும் இல்லை!" என்கிறார்.

ஆம்! உடல்தான் ஓடம்! வாழ்வுதான் கடல்! அந்த உடலாம் ஓடத்தைக் கொண்டுதான் வாழ்வாம் கடலில் பெற வேண்டுவன வெல்லாம் பெற்றாக வேண்டும். உடலாம் ஓடம் உடைந்தால் பொறியும் இல்லை; புலனும் இல்லை; பொருளும் சுற்றமும் பிறவும் இல்லை; ஆதலால் உடல் இருக்கும்போதே செய்ய வேண்டியவற்றைச் செய்து விட வேண்டும் என்று வலியுறுத்து கிறார் சிவவாக்கியர்.

உழலும் உடல்

உடல் என்னும் பெயரே உழலுதலுக்கு அல்லது துன்புறு தலுக்கு அமைந்தது; அழிவுக்கு உரியது என்பதை விளக்குவதாம். இதனைச் சிவவாக்கியர் அறியாதவர் அல்லர். இதனை விளக்க ஒரு செய்தியை இரண்டுமுறை இயம்புகிறார்.