உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

23

நூலறிவால் காண முடியாத இறைவனை எப்படிக் காண முடியும் என்பதையும் விளக்குகிறார் சிவவாக்கியர்.

"சாத்திரம் ஓதுகின்ற சட்ட நாதபட்டரே! வேர்த்து இரைப்பு வந்த பொழுதில் வேதம் வந்து உதவுமோ! ஒரு மாத்திரைப் பொழுதாவது உம் உள்ளே நோக்கைத் திருப்பி நோக்கத் தொடங்கினால் இரைப்பை நோய் உமக்கு இல்லை; சத்தியும் முத்தியும் சித்தியாகும்" என்கிறார்.

வசையும் திட்டும்

மிகமிகத் தெளிந்து இது பெரும்பயன் விளைவிக்கும் என்று சொல்லும் கருத்தைப் பொருட்டாக எண்ணாமல் போகின்ற பலரை வாழ்வில் காண்கிறார். அத்தகையரே மிகுதியாக இருக்கின்றனர் என்பதையும் காண்கிறார். ஒரு தாய் தன் மக்கள்மேல் கொண்ட பேரன்பால், அவர்கள் நல்வழி விடுத்து அல்வழியில் செல்லும்போது திட்டித் தீர்ப்பது இல்லையா? அத்திட்டு அழிவு நோக்கியது இல்லையே! ஆக்கம் நோக்கியது அல்லவோ! அது போல் சிவவாக்கியரும் செவியிருந்தும் கேளாது செல்வாரை நன்றாகத் திட்டுகிறார்; நேருக்கு நேர் திட்டுகிறார்: பாவிகாள், பேதைகாள், பித்தர்காள், ஊமைகாள், பேயர்காள், தீனர்காள் என்கிறார். மூடர், பொய்யர் என்றும் சொல்கிறார். மட்டிப் பிணமாடு எனக் கொட்டித் தீர்க்கிறார். 'வாய் புழுத்து மாய்வர்' என்று வசையின் உச்ச நிலைக்குச் செல்கிறார். அறுப்பனே செவியிரண்டும்" என்றும் வீறு மொழிகிறார். நல்ல வேளை! வாளால் அறுக்க முந்தாமல் 'அஞ்செழுத்து வாளினால்' அறுப்பதாகக் கூறுகிறார்!

பொய்யடிமைப்பட்டும், பொருளடிமைப்பட்டும் மெய்ப் பொருளைக் குழிதோண்டிப் புதைப்பதே கடப்பாடாகச் செய்யும் பூசகர்களை நினைக்கிறார் சிவவாக்கியர். அவர்கள் செய்கை அருவருப்பை ஆக்குகின்றது! வழிகாட்டியே, ஏமாற்று வஞ்சத்திற்கு வழிகாட்டியாக இருந்தால், வழிநடப்பவன் எப்படி இருப்பான் என ஏங்குகிறார். அதனால்,

"வேதம் ஓதும் வேதியா விளைந்த வாறு பேசடா”

என்கிறார். சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரையும் பட்டநாத பட்டரையும் சந்திக்கு இழுக்கிறார். மலமும் அழுக்கும் முடையுமே திரண்டு குருக்களாக வந்த கொடுமையைக் குத்திக் காட்டுகிறார்.