உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

27

சொல்லவும் முடியாததாய்ப் போயிற்று! நல்ல வேளையாகச் சித்தர்கள் தம் வாழ்வியல் தொண்டாகக் கொண்ட மருத்துவத் தொண்டாலும், மருத்துவ நூல்களாலும் இதுகால் உயிர்த் தெழுந்து உள்ளனர்! உலக உய்திக்குச் 'சித்த சமயம்' சீரிய சமயம் என்பது என்றோ ஒரு நாள் விளங்கும். அன்று திருவள்ளு வரும், திருமூலரும், வள்ளலாரும், சிவவாக்கியர் போல்வாரும் உலகோரால் தலைமேல் கொள்ளத் தக்கவர்களாக இருப்பர்.

இனிச் சிவவாக்கியர் புரட்சிமுறைகளை முறையே காணலாம். கோயில் குளம்

கோயில் குளங்களைப் பற்றிச் சிவவாக்கியல் சொல்கிறார்: “கோயி லாவ தேதடா குளங்க ளாவ தேதடா

கோயி லுங்கு ளங்களும் கும்பி டுங்கு லமாரே

கோயி லும்ம னத்துளே குளங்க ளும்ம னத்துளே

ஆவ தூவும் அழிவதூவும் இல்லை இல்லை இல்லையே!"

“கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்ற தேதடா

வாயி னால்தொ ழுதுநின்ற மந்தி ரங்கள் ஏதடா

ஞாய மான பள்ளியில் நன்மை யாய்வ ணங்கினால்

காய மான பள்ளியில் காண லாம்இ றையையே!"

என்கிறார். கோயிலில் வணங்குவதே வணக்கம்; தெப்பக் குளத்திலே குளிப்பதே குளிப்பு என்பவரை நோக்கிக் கூறுவன இவை. உள்ளத்தில் கோயிலும் குளமும் ல்லை யானால் புறத்தே தோன்றும் கோயிலும் குளமும் என்ன மதிப்புப் பெறும்! உள்ளத்தோடு வாராத வலஞ் சுற்றலுக்கும் செக்குமாடு சுற்றலுக்கும் என்ன வேற்றுமை! செக்கிரைச்சலுக்கும் ஓதுதலுக்கும் என்ன வேற்றுமை!

கடவுள் வடிவம்

ஒருமுகப் படுத்துவதற்கு உருவம் வேண்டுவதாகலாம்; ஒளி விளக்கு வேண்டியதாகலாம்! ஆனால் அது முதல் நிலையே அன்றி, முடிநிலை இல்லை! முதல் நிலையே முடிநிலையாகவும் இருந்தால் பயன் என்ன? பாலர் பள்ளிப் பையன் படித்த புத்தகம், பட்டப் படிப்பு முடித்த பின்னரும் மாறாமல் இருந்தால் எந்தக் கிறுக்கனும் ஏற்றுக் கொள்வானோ? இந்நிலையில் இருக்கும் உலகியலை எண்ணிய சித்தர் கடவுள் உருவம் பற்றிக் கரைந்து கரைந்து பாடுகின்றார்: