உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம் -37

ஒலிப்பர்; ஒலிகேட்டு இணைசேரும் விருப்பால் நெருங்கி வரும். உடனே அதனைத் தாக்கிப் பற்றிக்கொள்வர். அவ்வேடர் தன்மையைப் போலவே மந்திர வேடர்களும் உள்ளனர் என்பதை உரைக்கிறார் சிவவாக்கியர். திருவள்ளுவர், 'கூடா ஒழுக்கம்' என ஓர் அதிகாரம் வகுத்துள்ளார். அதில் பொய்த் துறவிகளின் புன்மைகளை யெல்லாம் வெளிப்படுத்தி யுரைக்கிறார். அவற்றுள் ஒன்று.

"தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று"

என்பதாம்.

வஞ்ச நெஞ்சத்தார் ஊரை ஏமாற்றுவதற்காகச் சொல்லும் மந்திரம்.மணிமாலை உருட்டல் முதலியவற்றின் சிறுமையைச் சுட்டுகிறார் சிவவாக்கியர்:

“கூட்டி மெள்ள வாய்பு தைத்துக் குணுகு ணுத்த மந்திரம் வேட்ட காரர் குசுகுசுப்பைக் கூப்பி டாக முடிந்ததே. கைவ டங்கள் கொண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர் எவ்வி டங்கள் கண்டுநீர் எண்ணி எண்ணிப் பார்க்கிறீர்

பொய்யி றந்த சிந்தையைப் பொருந்தி நோக்க வல்லிரேல் மெய்க டந்த தும்முளே விரைந்து கூடல் ஆகுமே."

மந்திரம் ஓதுதல்

மந்திரத்தின்மேல் மட்டற்ற ஆர்வம் கொண்டுளர். ஏன்? மோகமே கொண்டுளர்! மதுக்குடியில் எவ்வளவு வெறி வைத்துளரோ அவ்வளவு வெறிவைத்துளர்! மந்திரம் என்ன மரத்தில் ஊறிய கள்ளாகவோ உள்ளது? மந்திரம் என்பது மூலநாடியை முறைப்படி செலுத்தி நிலை பெறுத்துவதேயாம்! அந்த மந்திரத்தைக் கைவரப் பெற்றவர்க்கு உலகவரை மயக்கிப் போலித் தன்மையால் பெறவேண்டிய மானம் என ஒன்று இல்லை:

“மந்தி ரங்கள் உண்டுநீர் மயங்கு கின்ற மானிடீர் மந்தி ரங்கள் ஆவது மரத்தில் ஊறல் அன்றுகாண் மந்தி ரங்கள் ஆவது மதர்த்தெ ழுந்த வாயுவே! மந்தி ரத்தை உண்டபேர்க்கு மானம் ஏதும் இல்லையே."