உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

31

அழுக்கு

அறம் என்பது யாது? என்னும் வினாவுக்கு அடிமூலந் தொட்டு முறையுரைத்தார் திருவள்ளுவர். அது "மனத்துக்கண் மாசிலனாதல்" என்பது! 'மனமாசு' இல்லாமையே அறம் என்ற வள்ளுவர், மன மாசுகள் எவை என்பதையும் எண்ணிச் சொன்னார். 'அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல்" என்னும் நான்கும் மனமாசுகள் எனத் தெளிவித்தார். மன மாசு அகலாதார் நாளைக்கு முப்பொழுது நறுநீர் ஆடினாலும் பயன் என்ன?

"புறத்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மை யால் காணப்படும்" என்பது அறமாகப் புறநீர்மை விரும்பி விரும்பிச் செய்து, அகநீர்மையை அழிக்கும் செயலை அதனினும் விரும்பி விரும்பிச் செய்தால் அவர் கொள்ளும் நன்மையென்ன? பிறர் கொள்ளும் நன்மையென்ன? அழுக்குச் சேற்று நீரிலே வீழ்ந்து குளித்து வீதியில் போனால் அவனுக்கு மட்டுமோ நாற்றம்? வீதியையும் நாறவைக்கும் 'நோன்பு' மேற்கொண்டதாக வல்லவோ ஆய்விடும்?

அகத்தழுக்கு (மனமாசு) அகற்றுதலே, அகத்தழுக்கு அணுகாத இறையோடு அணுகி வாழ வகை செய்யும் என்று சிவவாக்கியர் கூறுகின்றார்.

“அழுக்க றத்தி னங்குளித் தழுக்க றாத மாந்தரே அழுக்கி ருந்த தவ்விடம் அழுக்கி லாத தெவ்விடம் அழுக்கி ருந்த அவ்விடத் தழுக்கறுக்க வல்லிரேல் அழுக்கி லாத சோதியோ டணுகி வாழ லாகுமே." நீராட்டம்

நீராட்டால் மட்டும் நின்மலனை அடைய முடியாது என்பதை உவமையால் தெளிவிக்கிறார் சிவவாக்கியர். தவளை தண்ணீருள் தானே எப்பொழுதும் கிடக்கிறது? அதன் அழுக்குப் போய்விட்டதா? அழுக்கே போய்விட்டது என்றாலும் புற அழுக்குத் தானே போனது? அதற்கு மெய்யுணர்வுத் தலைப்பாடு உண்டாயிற்றில்லையே! அது நீரிலே எப்பொழுதும் கிடந்து, ஓயாமல் ஒலித்துக் கொண்டிருப்பதற்கும் மூன்றுவேளையும் நீராடி அழுக்கறாதவன் மந்திரம் முணுமுணுத்துக் கொண்டிருப் பதற்கும் என்ன வேற்றுமை?