உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

39

இந்த நாட்டில் உண்டு. கண்படுதலும் தீட்டு என்னும் கயமையும் கால் கொண்டு செழித்ததுண்டு.

இந்நிலையில் சித்தர்களோ மாந்தர் அனைவரும் ஒத்தவர் களே; உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் என்று பிரித்தல் அறிவறியாத் தனமே அல்லது ஏய்த்துப் பிழைக்கும் நரித்தனமே எனக் கண்டு கடிந்தனர். அவ்வாறு கடிந்து கூறியவருள் தலையாயவர் சிவவாக்கியர் எனின் முற்றிலும் தகும். அவர், அவர்தம் வழக்கம் போலவே சாதிக் குறும்பின் ஆணி வேரை அசைத்துப் பிடுங்கி வெந்நீர் விட்டுப் பார்க்கிறார்! ஆனால், அவர் வாக்கையே கப்பென்று அடைத்து விடுதலில் கை தேர்ந்தவர்களாகத் தந்நலத்தார் இருந்ததால் பொதுமக்கள் காதுகளில் அவர் சொல் விழாமலே போயிற்று. அப்படியே விழுந்திருந்தாலும் மிதிபடுபவனே, மிதிப்பவன் செயல் ஆண்டவன் கட்டளை, அறத்தின் தீர்ப்பு, தலைவிதி என்று கொண்டுவிட்ட நாட்டிலே என்ன மாற்றத்தைக் கண்டுவிட முடியும்?

சிவவாக்கியர் பேசுகிறார்:

"சாதி யாவ தேதடா?" என்கிறார். 'சாதி இல்லை' என்பது எதனால் என்றால் விளக்குகிறார்: எல்லாரும் பிறப்பதுபோல் தானே தாழ்த்தப்பட்டவர்களும் பிறக்கின்றனர். அவர்கள் மட்டும் வேறு வகையிலா பிறக்கின்றனர்! அல்லது உயர்ந்தவர்கள் என்னும் இனத்தார், எவருக்கும் இல்லாத வியப்பானதொரு முறையில் பிறக்கின்றனரா?

எல்லாரும் சலம் திரண்ட நீரில்தாம் பிறக்கின்றனர்; எல்லார் பிறப்பு வாயிலும் ஒன்றுதான்; முறைமையும் ஒன்றுதான்!

காதில்போடும் வாளி உண்டு; காரை உண்டு; கம்பி உண்டு; காலில் போடும் பாடகம் சிலம்பு உண்டு; எல்லாமும் பொன்தானே! அவை வேறு அணிகலமாக இருந்தாலும், அவற்றின் மூலப் பொருள் பொன்தானே! இவற்றுள் உயர்வு தாழ்வு மேல் கீழ் சொல்ல முடியுமோ?

“காதில் வாளி காரை கம்பி பாடகம்பொன் ஒன்றலோ சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே”

பறைச்சி என்று சிலரைத் தாழ்த்தி வைத்ததென்ன? பனத்தி (பார்ப்பனத்தி) என்று சிலரை உயர்த்தி வைத்ததென்ன?

இறைச்சி தோல் எலும்பு இவற்றில் இது பறைச்சிக்குரியது; இது பனத்திக்குரியது என அடையாளமேதும் உண்டோ?