உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

43

எனத் தரவு கொச்சமாக வருகின்றதாம். காய், காய், காய் விளம் அல்லது காய் எனச் சீர்கள் வருதலும் மூன்றாம் சீர் மோனை பெற்று வருதலும் காண்க.

எழுசீர்ச் சந்த விருத்தங்களாகவே எல்லாப் பாடல் களையும் வைத்துக்கொண்டால் சீர்குறைதல், அசை குறைதல் ஆகிய இடர்கள் நேர்தல் பலபாடல்களில் உண்டு. ஆனால் ஆறுசீர்ச் சந்த விருத்தமாக்கிக் கொண்டால் அவ்விடர்ப்பாடு இல்லை.

"ஓடம் உள்ள போதலோ ஓடி யேயு லாவலாம்

ஓடம் உள்ள போதலோ உறுதி பண்ணிக் கொள்ளலாம் ஓடம் உடைந்த போதிலே ஒப்பி லாத வெளியிலே ஆடும் இல்லை கோலுமில்லை யாரும் இல்லை ஆனதே”

இப்பாடலில் முதல் மூன்று அடிகளும் திட்டவட்டமாக ஆறு சீர்களாகவே அமைந்துள. நான்காம் அடி ஒன்றை மட்டும் ஏழு சீராகக் கொள்ள வாய்ப்புள்ளது! ஆனால் அதனை ஆறுசீர் ஆக்கிக் கொள்வதில் இடரொன்றும் இல்லை இக் கருத்தாலேயே சிவ வாக்கியர் பாடல்களை ஆறுசீர்ச் சந்த விருத்தங்களாக யாப்பமைதி செய்தல் முறையாம்.

ஆனால் இடர்ப்பாடு இல்லாமல் படிக்கவும் பொருள் காணவும் தரவு கொச்சக அமைப்பே (மூன்றாவது அமைப்பே) பெருவாய்ப்பாக உள்ளதாம். இங்குச் சந்த வகையில் படித்தும் பாடியும் மகிழ்வதற்கு வாய்ப்பாக ஆறுசீர்ச் சந்த விருத்த அமைதி மேற்கொள்ளப்பட்டதாம்.

சிவவாக்கியர் பாடலில் அடுக்குச்சொற்கள் மிகுதி; அடிகள் அடுக்கிவருவதும் உண்டு. மீண்டும் மீண்டும் சொல்லோ தொடரோ அடுக்கிவருதலிலே சொற்சுவை பொருட்சுவை மிகுதலும், பொருள் விளக்கம் எளிமையாகப் பெறுதலும் கண்கூடு. இம்முறை திருமூலர் முதலிய பெருமக்கள் முன்னரே காட்டிய வழிமுறைப்பட்டதாம். அதில் சிவவாக்கியர் பேரீடுபாடு கொண்டுளார் என்பது வெளிப்படை.

எழுசீர்ப் பாடல்களை 14 சீர்ப் பாடல்களாக - இரட்டை ஆசிரிய விருத்தமாகச் செய்ததும் உண்டு. சந்தம் மாறாமல் சீர் எண்ணிக்கையை இரட்டிப்பு ஆக்கிக் கொள்ளுதல் இதன் அமைப்பு முறையாம். இம்முறையில் ஏழு பாடல்களைப் பாடியுள்ளார்.