உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

சில பாடல் செய்திகள் அப்படியே அமைந்துள. ஓரிரண்டு சீர்கள் அசைகள் மாற்றமன்றி வேறொன்றிலாத அமைப்பு ஒப்புமையும், பொருள் நிலையில் முழுதொப்புமையும் உண்டு. அப்பாடல்களுள் ஒன்றை விலக்குதல் தகும் எனினும், பாடவேறு பாடுபோல ஆய்வார்க்கு உதவும் என்னும் கருத்தால் விலக்கப் பட்டில. எடுத்துக்காட்டாக 203, 267 ஆம் பாடல்களையும், 159, 205 ஆம் பாடல்களையும் காண்க. பாடல் வேறாயினும் பொருள் மாறாதிருத்தலை 127, 256 ஆம் பாடல்களிலும் 308, 462ஆம் பாடல்களிலும் காண்க.

இவர் பாடல்களில் நின்ற பாடலின் இறுதி வரும் பாடலின் முதலாக வரும் ஈறுமுதல் அல்லது அந்தாதி நிலை சில இடங்களில் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக 429 முதல் 452 வரையுள்ள பாடல்களைக் காண்க.

இவர் பாடல்களில் உவமைகள் உருவகங்கள் ஆகியவை அருமையாக அமைந்துள. இறந்தவர் பிறப்பதில்லை என்பதை ஐந்து உவமைகளால் தெளிவிக்கிறார். (46). மனத்து மாயை மனத்து மறைந்ததை நீர் ஆவியாகிப் போதலைக் கொண்டு விளக்குகிறார்.(37), கடலில் திரியும் ஆமை, பச்சை மண் பதுப்புப் புழு முதலியவற்றை உவமைப்படுத்துகிறார் (95, 103).

"மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரை” (150)

என்றும்,

“சாவல் நாலு குஞ்ச தஞ்சு தாயதான வாறுபோல்" (149)

என்றும்,

"துருத்தியுண்டு கொல்லனுண்டு

சொர்ணமான சோதியுண்டு" {189)

என்றும்,

"காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகள்” (245)

என்றும் உருவகங்களைப் பலப்பலவாறாகப் பயன்படுத்துகிறார்.

"மனத்தகத் தழுக்கறாத மவுனஞான யோகிகள் வனத்தகத் திருக்கினும் மனத்தகத் தழுக்கறார்; மனத்தகத் தழுக்கறுத்த மவுனஞான யோகிகள் முலைத்தடத் திருக்கினும் பிறப்பறுத் திருப்பரே”