உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

113

(வி-ரை) "கஞ்சாத்தூள் இருக்க அதனை விடுத்து அரும்பாடு பட்டு அமுதம் உண்டது தேவர்களின் அறியாமையே" என்று இகழ்ந்தானாம் களியன். ஆகம்-உடல். கஞ்சாவும் மயக்கமூட்டும் லையாகலின் களிப்பொருள் ஆயிற்று.

(45)

46. திருப்பெயரை வெளியாக்கித் திரிகின்றார்

பிச்சியார்

எண்சீர் ஆசிரியவிருத்தம்

தாமணிவர் திரிசூலம் எதிர்கண் டார்மேல் சக்கரத்தை விடுவர்,சிவ சமயத் தாவர், காமுகரை ஆண்டுகொளார், சிவநூல் கேட்பர், கருத்தின்மால் தெரிசனமே காட்டா நிற்பர், ஆமையர வணிதொடையார் விடையார் வாழும் அருணகிரி வளநாட்டில் அகங்கள் தோறும் சேமநிதி எனவுலவும் பிச்சி யார்தம்

திருப்பெயரை வெளியாக்கித்திரிகின் றாரே.

(பொ-ரை) ஆமை ஓட்டையும் பாம்பையும் அணியும் மாலையாக உடையவராகிய இடபஊர்தியை யுடைய இறைவர். வாழ்கின்ற வளமான அண்ணாமலை நாட்டில், வீடுகள்தோறும் பாதுகாப்பாக வைக்கப் பெற்ற செல்வம்போல் உலாவுகின்ற பிச்சைப் பெண்டிர், தாங்கள் முத்தலைவேலைத் தரித்துக் கொள்வர்; தமக்கு நேரே கண்டவர் மேல் கண்ணாம் அரத்தைச் செலுத்துவர்; காமமிக்காரை ஆட்கொள்ளார்; சிவநெறி நூல்களைக் கேட்பர்; மனத்தில் மயக்கமுண்மையைக் காட்டுவர்; இத் தன்மையால் தம் அழகிய பெயராகிய பிச்சியார் என்பதை வெளிப்படுத்தித் திரிகின்றார்.

(வி-ரை) முத்தலைவேல் முதலாய சிவ அடையாளங்களை அணிந்து வீடுதோறும் சென்று பிச்சை ஏற்கும் மகளிரைக் காமுகன் ஒருவன் பார்த்துக் கூறுவதாகப் பாடப் பெறுவது பிச்சியார் என்பதாம். பிச்சியார் என்னும் பெயரை வெளிப் படுத்துதல் என்பது பித்தர் (கிறுக்கர்) எனத் தோன்றுதலாம். சக்கரம் சக்கு+அரம், கண்ணாகிய அரம்; சிவபெருமான் ஆமையோட்டை அணிந்தமை; திருமால் ஆமை வடிவு கொண்டு ஆணவம் மிக்கு அலைந்த காலை ஆணவத்தை அடக்கி அதன் ஓட்டை அணிந்தனர் என்பது. "முற்றலாமை... பூண்டு" என்றார் ஆளுடைய பிள்ளையார்.

=

(46)