உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ்வளம் -38

47. மொய்த்த வார்குழல் மோகனப் பிச்சியார்

இதுவும் பிச்சியார்

கட்டளைக் கலிப்பா

தில்லை மன்றுள்ந டம்புரி பாதனார் தேவ ராயர் திருவரு ணைக்குளே, முல்லை மல்லிகை சண்பகம் பிச்சியார் மொய்த்த வார்குழல் மோகனப் பிச்சியார் நல்ல மேனியும் பொற்றிரு வேடமே; நாடி யிட்டதும் பொற்றிரு வேடமே; இல்லை ஆயினும் இவ்விடை ஐயமே;

ஏற்க வந்ததும் இவ்விடை ஐயமே!

(பொ-ரை) தில்லைச் சிற்றம்பலத்துள் கூத்தியற்றும் திருவடியினரும், தேவராயர் என்னும் பெயரினரும் ஆகிய சிவனார் விளங்கும் திருவண்ணாமலையில், முல்லை, மல்லிகை, சண்பகம், பிச்சி, ஆத்தி ஆகிய மலர்கள் நிரம்பிய நீண்ட கூந்தலையுடைய மயக்கத் தக்க பிச்சைப் பெண்டிர் தம் நல்ல வடிவமும் திருமகளின் அழகிய வேடமேயாம்; அவர்கள் விரும்பி அணிந்து கொண்டதும் பொன்னால் செய்யப்பட்ட அழகிய சீதேவி என்னும் அணிகலமேயாம்; இடை இல்லை என்றே கூறினும் பிற உறுப்புகளை நோக்குங்கால் அவ்வாறு கூறியது ஐயமேயாம்; இவர்கள் இவ்விடத்து எடுக்க வந்ததும் ஐயமாகிய பிச்சையேயாம்.

(வி-ரை) பாதனார் - திருவடியுடையார்; ஆர் -ஆத்தி; மோகனம் - மயக்கம்; பொன் திருவேடம் இரட்டுறலாக பொன் மகளாம் திருமகள் வேடத்தையும், பொன்னால் செய்யப்பெற்ற சீதேவி என்னும் அணிகலத்தையும் குறித்தது. சீதேவி என்பது தலையணி; இதனைத் தெய்வ உத்தி என்பர் (சிலப்.கடலாடு.106). ஐயம் என்பதில் முன்னது ஐயுறவு என்பதையும், பின்னது பிச்சை என்பதையும் குறித்தது.

கட்டளைக் கலிப்பா என்பது எழுத்தெண்ணிப் பாடப் பெறுவது. அடிக்கு எண்சீர் கொண்ட இப் பா. நேர் முதலாய் அரையடிக்கு ஒற்று நீக்கிப் பதினோரெழுத்துப் பெற்று வந்தமை எண்ணிக் காண்க. நிரை முதலாயது எனின் பன்னீரெழுத்துப் பெறும் என்க.

(47)