உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

123

செய்வதாம். சம்பிரதம் இரட்டுற மொழிதலால் இயல்பான தொரு பொருளையும் தரும். அவ்வாறு பொருள் கொள்ளுங்கால், "பரந்த இடமாகிய பாலை நிலத்தில் பொருக்குண்டாகவும், காட்டில் மாவடு உண்டாகவும், கதிரோன் வடதிசைச் செலவு நாளில் வடக்காகவும், அசுரர் மாறுபட்ட இயல்பினராகவும், இரவில் கதிரோன் மறையவும், அந்திமாலையில் பகலும் இரவும் ஒத்திருக்கவும்" எனவும், "அண்ணாமலைக்கு ஒப்பான ஒரு பதியை உரைக்க முடியாது" எனவும் பொருள் தரும். பரவை கடல், பாலைநிலம்; பொருக்கு - வெப்பத்தால் மண்வெடித்துப் பொருக்குக் கிளம்புதல்; ககனம் - விண்; வடு - தழும்பு,மாவடு; நிருதி எண்திக்குக் காவலருள் ஒருவன், அசுரன்; குணக்கு கிழக்கு, மாறுபாடு; அவனிதலம் - உலகம்.

-

(55)

56. கருணாசலக் கடல் நேரிசை வெண்பா

உள்ளத்தின் ஞானம் உயர்ந்தவிடத் தன்றியிருட் பள்ளத்தில் என்றும் படராதே - வள்ளல்

அருணா சலப்பெருமான் அம்பிகையோர் பாகன் கருணா சலமாம் கடல்.

(பொ-ரை) வள்ளலும், அருணாசலப் பெருமானும், உமையம்மையை ஒரு பாகமாக உடையவனுமாகிய அருள் வெள்ளப் பெருக்கால் ஆகிய கடல், மனத்தில் மெய்யுணர்வு முதிர்ந்த இடத்தில் அல்லாமல் அறியாமையாகிய பள்ளத்தில் என்றும் சென்று பாயாது.

(வி-ரை) கடல் படராது' என இயைக்க. கருணாசலம் கருணை வெள்ளம். ஞானம்-மெய்யுணர்வு; மெய்யுணர்வை உள்ளொளி என்பராகலின் அஃதின்மை மைஇருள் என்றார்; வெள்ளம் பள்ளத்தில் படர்வதோர் இயற்கைத்து எனினும், இவ் வெள்ளம் இருட் பள்ளத்துச் செல்லாது என வேற்றுமை தெரிவித்தார். கடல் என உருவகித்து முரணக் கூறியமையின் இது முரண் உருவகமாம்.

(56)