உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

(வி-ரை) அம்பு, நாண், வில் ஆகியவற்றை அண்ணாமலை யார் உடையவராக வெளிப்படக் குறித்தார் 'புரமெரித்த போது' என்றார் ஆகலின். ஆனால், அம்பு நீரையும், நாரி பெண்ணையும், சிலை (தமருகத்தின்) ஒலியையும் குறிக்கும். ஆதலின், குறிப்பால் இயல்பு நிலையும் உரைத்தார். தலையில் கங்கையையும், இடையில் மங்கையையும், கையில் தமருகம் ஒலி எழுப்பி இருத்தலையும் உடையார் என்க. ஓர் இடம் என்றது ஒப்பற்ற இடப்பாகம்; தடக்கை - பெரிய கை.

62. பொன்பூசு கார்காலம்

கார்

கலித்துறை

போதற்கும் அரிதான அருணா சலத்தீசர் பொன் மேருவாய், ஏதப்ப டும்பாவி மனமே! பிரிந்தாரி தெண்ணார் கொலோ? ஓதத்தின் நீரோடு கனலுண்டு புயல்மீள உமிழ்தன்மைபோல் காதற்குள் மடவார்மெய் பொன்பூசு மின்வீசு கார்காலமே.

(61)

(பொ-ரை) உந்திப் போதில் தோன்றிய நான்முகனும் அறிதற்கு அரியவரான அண்ணாமலையாரின் பொன் போன்ற மேருமலையின்கண், துன்பப்படுகின்ற பாவியான மனமே, நம்மை விட்டுப் பிரிந்த தலைவர், மேகமானது கடலின் நீரொடு ஊழித் தீயையும் உண்டு மீண்டு உமிழ்கின்ற தன்மைபோல் பொழிந்து, காதற்கு உட்பட்ட மகளிர் உடலில் பசலையாகிய பொன்னிறத்தைப் பூசுவது போல் மின்வெட்டும், கார் காலம் இஃது என்பதை எண்ண மாட்டாரோ?

(வி-ரை) போது-பூ; இவன் உந்திக் கமலத்தைக் குறித்தது. அதில் தோன்றியவன் நான்முகன் எனப்படுதலால் 'போதற்கும்' என்றார். ஏதம்-துன்பம்; ஓதம்-கடல்; உள்-உட்படுதல், ஆட்படுதல்; மின் வீசுதலைப் பொன் பூசுதல் என்றார்; பொன் பூசுதல் என்றது பசலை நோயைக் குறித்தது. அண்ணாமலையைப் பொன்மேரு என்றார், இறைமையும் உயர்வும் கருதி, தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் வந்தும் அவன் வாராமையால் வருந்திக் கூறியது இது,

(62)