உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ்வளம் -38 e

84. தனம் இல்லாரிடம் கடன் கேட்பதா?

தோழி தலைவனுக்குத் தலைவியின் இளமை

யுணர்த்தல்

அறுசீர் ஆசிரியவிருத்தம்

தடனாக மணிவெயிலும் பிறையுமிழும் நிலவுமெதிர்

சடில நாதன்

அடனாக நெடுஞ்சிலையான அசுரர்புரம் எரித்தபிரான்

அருணை நாட்டில்

திடனாகம் அனையவரே தனம்சிறிதும் காணாத

சிறியார் தம்மைக்

கடனாக நீர்வினவிப் பிணைதேடி முறிதனையேன் கைக்கொண் டீரே.

(பொ-ரை) பெரிய பாம்பின் மாணிக்க ஒளியும், பிறைத் திங்கள் தரும் நிலவொளியும், எதிரிட்டு விளங்கும் சடையப்பரும், வலிய மேருமலையாம் நீண்ட வில்லால் அசுரர்களின் முப்புரங் களை எரித்தவருமாகிய சிவபெருமானது அருணை நாட்டில் வலிய யானையைப் போன்ற தலைவரே, நீவிர் மார்பு சற்றும் தோன்றாத இளைய மகளிரைத் தழுவத்தக்க கடன்மை முறையினராகக் கேட்டு 'மான் வந்ததோ' என வினவித் தேடித் தழையை ஏன் கையில் கொண்டீர்?

(வி-ரை) தலைவியின் இளமைத் தன்மையை இயம்பித் தலைவின் விழைவின் பயனின்மையைத் தோழி உரைத்தது இது. தனம் இல்லாரைத் தேடிக் கடன் வினவுதலும், பிணை தேடுதலும் முறி எழுதுதலும் வழக்கில் இன்மையைக் குறிப்பால் கொண்டு நயமாகக் கூறினார். இப் பகுதி இரட்டுற மொழிதலாம். இதன் பொருள்: "கைப்பொருள் சிறிதும் இல்லாத வறியரிடம் தந்த கடனைக் கேட்டுச் சான்று தேடி முறி எழுதிக் கையில் கொண்டது ஏன்? என்பதாம். தடநாகம் பெரிய பாம்பு; அடல் நாகம் வலிய மலை; திடநாகம் - வலிய யானை; தனம் -கொங்கை, செல்வம்; பிணை - மான், சாட்சி; முறி தழை, ஓலைமுறி.

-

(84)