உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம் *

85. அன்றுதான் அருணேசர் வருவாரோ? அறுசீர் ஆசிரியவிருத்தம்

கையடைந்த மழுமானும் செழுமானும் உழைமானும்

கயலும் மானும்

மையடைந்த விழிமானும் உடனாக அருணேசர்

வருகு வாரே;

மெய்யடைந்த நிறம்கருகி விழிகளும்பஞ் சடைந்துவர

மிடற்றின் ஊடே

ஐயடைந்து படர்ந்துவர யமனடர்ந்து தொடர்ந்துவரும்

அன்று தானே.

149

(பொ-ரை) உடலில் அமைந்த நிறம் கருமையடைந்து கண்களும் ஒளி இழந்துவர, கழுத்தில் கோழைசேர்ந்து பெருகிவர, கூற்றுவன் நெருங்கித் தொடர்ந்துவரும் இறுதிப் பொழுதில் கையில் பொருந்திய மழுவும் மானும், செழுமையான காளையும், உழைமானையும் கயல் மீனையும் ஒப்பான மைதீட்டப்பெற்ற கண்களைக் கொண்ட உமையம்மையும் தம்முடன் அண்ணாமலையார் வருவாரோ? வாரார்.

வர

(வி-ரை) 'நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்"

என்பதுபோல 'இறைநாட்டமும் இளமை தொட்டே வேண்டும்' என வலியுறுத்தினார். "சாகும்போது சங்கரா சங்கரா" என்பதால் பயனென்ன என்னும் பழமொழிக் கருத்தை விளக்குவது இப் பாட்டு. மழுமான் என்பது மழுவும் மானும் என உம்மைத் தொகை; செழுமான் செழும் ஆன் எனப் பிரிக்கப் பெற்றுப் பண்புத் தொகையாம்; உழைமான் உழையாகிய மான் என இருபெயரொட்டுப் பண்புத்தொகை; விழிமான் என்றது உமையம்மையை இது வேற்றுமைத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. மான் என்னும் சொல்லை முன்னிரண்டடி களில் நயமுற எடுத்தாண்டார். பின்னிரண்டடிகளில் பிணி மூப்புச் சாக்காட்டு நிலையைத் தெள்ளிதின் விளக்குகின்றார். இது தன்மை நவிற்சியணியாம். ஐ - கோழை; மிடறு கழுத்து. 'அன்று தானே வருகுவாரே' என இயைக்க. (85)