உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

155

(பொ-ரை) தீமை பயப்பதாம் நஞ்சினைக் கழுத்தில் அணிந்து கொண்டவராகிய அண்ணமலையாரின் திருநாட்டிலே, வளைந்த வில் போன்ற அழகிய புருவம் விளங்கும் பெண்களே, இங்கே இவள் ஒருவர் கையில் இருந்து மலரை வாங்கியதற்காக நீங்கள் ஆட்டை வெட்டிப் பலியிடுவது அறமன்றே!

(வி-ரை) தலைவன் பிரிவால் தலைவி மெலிவடைய, மெலிவின் காரணம் அறியாத செவிலித்தாய் கட்டுவிச்சியை அழைத்துக் குறி கேட்பாள். அவள், முருகன் உட்புகுந்த செய்தி யல்லது வேறு இல்லை என்று கூறி வேலன் வெறியாட்டு நடத்த ஏற்பாடு செய்வாள். அப்பொழுது உண்மையுணர்ந்த தோழி அவர்கள் உணருமாறு தலைவன் தொடர்பைக் குறிப்பாகக் கூறுவான். இதனைப் பற்றிக் கூறுவது அறத்தொடு நிற்றல் எனப்படும். செவிலி எடுத்த வெறியாட்டை விலக்குதலால் வெறிவிலக்கு என்பது துறைப்பெயர் ஆயிற்று. வெறியாட்டின் போது ஆட்டைப் பலியிடுதல் உண்டென்பது இச் செய்யுளால் புலப்படும். 'இவள் ஒருவர் கையேட்டை வாங்கினால் நீங்கள் மையழிப்பது நீதியல்லவே' என்றது, "இவள் ஒருவர் கையில் இருந்த ஓலைச் சுவடியை வாங்கினால் நீங்கள் அச் சுவடியில் உள்ளமையை அழிப்பது முறையன்று" என்று பிறிதொரு பொருள் தருதலும் அறிக.ஏர்-அழகு;கடு - நஞ்சு; மை - ஆடு.

94. கடைப்பட்டவை

தலைவன், தலைவியைப் புகழ்தல் கட்டளைக் கலித்துறை

அள்ளற் கடல்விடம் நீங்கா தகண்டர் அருணைவெற்பிற் பிள்ளைப் பிறையும் சிலையுமொப் பாம்நுதல் பேதைநல்லாள் வள்ளைக் குழைபொரு கண்ணுக்குத் தோற்றம்பும் வாரிதியும் கள்ளக் கயலும் இராசியின் மீனும் கடைப்பட்டதே.

(93)

(பொ-ரை) அள்ளி அருந்தத்தக்க பாற்கடலில் தோன்றிய நஞ்சம் நீங்காத கழுத்தையுடைய சிவனாரது திருவண்ணா மலையில், இளம்பிறையையும் வில்லையும் போன்ற நெற்றியை யுடைய இளமையான நல்ல தலைவியின் வள்ளை இலை போன்ற காதினைத் தொடுகின்ற கண்களுக்குத் தோல்வி யடைந்து அம்பும், கடலும், கரிய கயல்மீனும், இராசியின் மீனும் கடைப்பட்டது.