உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

98. சோறு இருக்கக் கூழை விரும்புதல் வண்டோச்சி மருங்கணைதல்

அறுசீர் ஆசிரியவிருத்தம்

தாரிலங்கு மறைமுடிவில் நடித்தருளும் அருணேசர்

தமது நாட்டில்

நாரியர்மேல் மனமகிழும் அளியினங்காள் ஒருவார்த்தை நவிலக் கேளீர்!

ஏரிருக்கும் கைதையெலாம் சோறிருக்க நீரிருக்கும் இடங்கள் தோறும்

வேரிமலர்த் தேனிருக்க இவர்கூழை விரும்பிவந்தேன் விழுகின் றீரே!

159

(பொ-ரை) தொடர்ச்சியாக விளங்கும் மறையின் முடிவில் நடித்தருளுகின்ற அண்ணாமலையாரின் நாட்டில், நங்கை யரிடத்து மனம் மகிழ்கின்ற வண்டினங்களே, யான் ஒரு சொல் சொல்லக் கேட்பீராக; நீங்கள் இருக்கும் இடங்கள்தோறும், அழகமைந்த தாழைகளில் எல்லாம் சோறு இருக்கவும், மணம் பொருந்திய மலர்களில் தேன் இருக்கவும் அவற்றை விரும்பி யுண்ணாமல், இத் தலைவியின் கூழையாகிய கூந்தலை விரும்பி வந்து மொய்க்கின்றீரே (நும் அறியாமை இருந்தவாறு என்னே!)

(வி-ரை) தலைவன் தலைவியைத் தொடுதற்குரிய வழி பார்த்துக் கொண்டிருக்க, அவன் கூந்தல் மலரில் தேன் அருந்த வந்த வண்டை ஓட்டுவான்போல அவள் மெய்யைத் தொடுதல் 'வண்டோச்சி மருங்கு அணைதல்' என்பதாம். 'மெய்தொட்டுப் பயிறல்' என்பதும் இது, 'சோறும் தேனும் இருக்க அவற்றை விடுத்துக் கூழை விரும்புவது ஏன்?' என்ற உண்டிக் குறிப்பு நயஞ்செய்தல் அறிக. சோறு - கற்றாழையில் உள்ள சோறு ஆகும்; அது மடலில் உள்ள தசைப்பற்று; கூழை என்றது கூந்தலை; கூழ் என்னும் எளிய உணவை இரட்டுறலால் குறித்தது. வேரி - மணம்; ஏர் - அழகு; அளி - வண்டு.

(98)