உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

வண்டுறைதார்ச் சுந்தரனார் மாமிபுன லாடமங்கை விண்டுகடல் ஏழழைத்தார் மெய்மதுரைக்(கு) அம்மானை; விண்டுகடல் ஏழழைத்தார் மெய்மதுரைக்(கு) ஆமாகில் தெண்டிரையேழ் சுற்றுமன்றோ தீவினைச்சென்(று) அம்மானை; தீவினையேன் சுற்றுமெங்கோன் சிந்திக்கில் அம்மானை.

(பொ-ரை) வண்டுகள் தங்கும் கொன்றை மாலை யணிந்த சுந்தரனார் தம் மாமியாம் அரசியார் கடல் நீராட விரும்புதலை உமையம்மை உரைத்தாராகக் கடல்கள் ஏழையும் வாய்மை வளரும் மதுரைக்கு வருவித்தார் அம்மானை; உமையம்மை வேண்டக் கடல்கள் ஏழையும் மதுரைக்கு அழைத்தாரே ஆயினால், தெளிந்த அலைகளையுடைய கடல்கள் ஏழும் சென்று தீவினைச் சுற்றிக்கொள்ளும் அன்றோ அம்மானை; எம் இறைவன் எண்ணும் போது தீவினை எப்படிச் சுற்றும் அம்மானை.

(வி-ரை) விண்டு -உரைத்து; திரை - அலை; கடல்; கடல் சுற்றி நிற்கும் இடம் 'தீவு'ஆதலால், "தெண்டிரை ஏழ் சுற்று மன்றோ தீவினைச் சென்று" என்றார். தீவினை - தீவை; தீயவினை. எங்கோன் சிந்திக்கில் தீவினை ஏன் சுற்றும் இறைவன் அருளுண்டாயின் தீவினை சூழுமோ? 'இறைவன் அருளால் தீவினையறும்' என்னும் கருத்தை இரட்டுறலால் குறித்தார்.

10. மலயத்துவசனை அழைத்தது

(விண்ணுலகு சென்ற மலயத்துவசனைக் காஞ்சனையுடன் கடலாடுதற்காகத் தடாதகை வேண்டியவாறு அழைத்தது.)

மழைக்கடலிற் சென்றாடு மாமிக்காச் சுந்தரன்சீர்

தழைக்குமல யத்துவசனைத் தானழைத்தான் அம்மானை; தழைக்குமல யத்துவசனைத் தானழைத்தான் ஆமாகில் அழைப்பதெவன் வானடைந்த அம்மானை அம்மானை; அம்மானைக் கையில்வைத்த அண்ணலன்றோ அம்மானை.

(பொ-ரை) பெய்யும் மழையால், பெருகிய ஏழு கடலில் போய் நீராடும் தன் மாமிக்காகச் சுந்தரன் புகழ் பெருகும் தன் மாமன் மலயத்துவசனை மதுரைக்கு வரச்செய்தான் அம்மானை; புகழ் பெருகும் மலயத்துவசனை அழைத்தானே ஆயினால், வானடைந்த அம்மானாம் அவனை அழைத்த தெப்படி அம்மானை; அம்மானை (அழகிய மானை)க் கையில் வைத்த பெரியவன் அவனன்றோ அம்மானை.