உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

அழிக்குந் தொழிலவர்க்கே தச்சமையம் அம்மானை;

அச்சமைய மன்றி அழித்தறியார் அம்மானை.

197

(பொ-ரை) வழி நடந்த பார்ப்பனன் மனையாள் இறந்த வகையைப் பாண்டியனுக்குச் சொக்கர் பழிக்கு அஞ்சியவராய் முன்னாளில் அறிவித்தார் அம்மானை; பழிக்கு அஞ்சிச் சொக்கர் உண்மையை முன்னாளில் உரைத்தாராயினால், அழிக்கும் தொழிலினராகிய அச்சொக்கர்க்கு ஏது அக்கொள்கை அம்மானை; அழிக்கும் பொழுதேயன்றி மற்றைப்பொழுதில் அழித்தறியார் அம்மானை.

(வி - ரை) பழிக்கஞ்சிச் சொக்கர் -பெயர். அழிக்குந் தொழிலவர்க்கு ஏது அச்சமையம் - அச்சமையம் - அக்கொள் கை, அந்தப் பொழுது. அச்சம் ஐயம் - அச்சமும் ஐயப்பாடும். அச்சமையம் அன்றி அழித்து அறியார் - அச்சு (உடல்) அமையம் அன்றி அழித்து அறியார். அமையம் சமையம். அழிப்புக் கடவுள் அவரே எனினும் காலமன்றி அழியார் என்றார்.

-

26. மாபாதகம் தீர்த்தது

(தாய்க்குப் பழியுண்டாக்கித் தந்தையைக் கொன்று கொடுமைக்கோர் உருவமாக வந்த பார்ப்பனன் ஒருவனை இறைவன் வேடர் உருக்கொண்டு வந்து அவன் பாவத்தைப் போக்கியது.)

ஆபாவி அன்னையைத்தோய்ந் தப்பனைக்கொன் றோன்கொடிய மாபா தகந்தீர்த்த வள்ளல்சொக்கர் அம்மானை; மாபா தகந்தீர்த்த வள்ளல்சொக்கர் ஆமாகில்

சாபமலை யாயவர்பாற் சார்ந்ததே அம்மானை; சாராதோ சத்தியந்தப் பாகநின்றால் அம்மானை.

(பொ-ரை) மிகக் கொடிய பாவியாகிய அவன் தன் தாயைக்கூடி, அப்பனையும் கொன்றான்; அவனது கொடும் பாவத்தையும் தீர்த்த வள்ளல் பெருமான் சொக்கர் அம்மானை; கொடும்பாவத்தைத் தீர்த்த வள்ளல் சொக்கரே ஆயினால் அவரிடம் சாபம் மலைபோல் சார்ந்து விட்டதே அம்மானை; சத்தியம் தப்பாக நடந்து கொண்டால் சாபம் சார்ந்து விடாதோ அம்மானை.