உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

-

207

அழிப்பதற்குத் துணையானதால் அன்பர் உயிர்க்குயிராக நிற்கும் இறைவன் கிள்ளியை அழித்தான் என்க. மடு சேறும் நீரும் நிரம்பிய பள்ளம்; கிள்ளி சோழன். கிள்ளி வலி கண்டு பொறுக்கின்றது அரிது என்பதற்குக் 'கிள்ளியதால் உண்டாகும் வலியை நேரில் அறிந்தும் அதனைப் பொறுத்துக் கொள்ளுதல் அருளாளர்க்கு அரிது; ஆதலால் இறைவன் கிள்ளியை (கிள்ளியவனை) மடுவில் வீழ்த்தினார் என உலகியற் பொருளும் காண்க.'ஓங்கி வாழ்வார்' கீழ் வீழ்த்தது' என்பதில் முரண்சுவை யறிக.

38. உலவாக்கோட்டை அருளியது

(அடியார்க்கு நல்லான் என்பான் சிவனடியார்க்குக் குறைவின்றி உணவளிப்பதற்காக இறைவன் அள்ள அள்ளக் குறையாத நெற்கோட்டை வழங்கியது.)

அன்னமளி யென்றுநல்லார்க் கன்றுலவாக் கோட்டைநெல்லைத் துன்னுபயி ரிட்டார்போற் சொக்கர்தந்தார் அம்மானை; துன்னுபயி ரிட்டார்போற் சொக்கர்தந்தார் ஆமாகில் செந்நெலிட்டால் வேண்டாமோ செய்யாளும் அம்மானை; செய்யாளே வல்லவர்தாம் தேடவல்லார் அம்மானை.

(பொ-ரை) நிரம்பப் பயிரிட்டவர் போலச் சொக்கநாதர் அடியார்க்கு நல்லான் என்பானுக்கு, அடியார்க்கும் வேண்டும் உணவு அளிக்க என்று உலவாக்கோட்டை நெல்லை உதவினார் அம்மானை; பயிரிட்டார் போல் சொக்கர் உதவினாரானால், செந்நெல் பயிரிட அவருக்கு வயல்வேலை செய்வதற்கு ஆள் வேண்டாமோ அம்மானை; செய்யில் வேலை செய்யும் ஆள் என்ன, செய்யாளாம் திருமகளையே ஏவ வல்லவர் ஆகிய திருமாலும் தேடவல்லவர் அம்மானை.

(வி-ரை) நல்லார் -அடியார்க்கு நல்லார் என்பார். துன்னு

பயிரிட்டார்-பல்கால் பயிரிட்டார்.

செய்யாள் - இலக்குமி; செய் ஆள் - (நன்செய் புன்செய் ஆகிய) செய்யில் வேலை செய்யும் ஆள்.

செய்யாள் ஏ(வ) வல்லவர் தாம் தேடவல்லார்-செய்யாள் ஆகிய இலக்குமியையும் ஏவல் கொள்ள வல்லவராம் திருமாலாலும் தேடிக் காண வல்லவர்க்கு அரிதன்று என்பதாம். 'வேலை யானை ஏவ வல்லமை பெற்றவரே நிரம்பத் தேடவல்லவர்' என்னும் உலகியற் பொருளை அறியுமாறும் ஈற்றடியை அமைத்தார்.