உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

-

இளங்குமரனார் தமிழ்வளம் 38

(வி ரை) விசை விரைவு; இசையார் - பாடுபவர்; ஒப்பாதவர்; இவர் மாணவராக இருத்தற்குத் தகாதவர் எனப் பாணபத்திரனால் அகற்றப்பட்டவர் எனக் கூறினார் ஆகலின் 'இசைக்கு இசையாதவர்' என்னும் கருத்து விளங்கக் கூறினார். ஏலுமோ -ஏற்குமோ?

ஏலு மதனை எரிக்கவென்றால் -ஏலும் அதனை எரிக்க என்றால் -(ஏற்கும் அவ்விறகை எரிக்கவென்றால்), ஏலும் மதனை எரிக்க என்றால் (ஏற்கும் செருக்கை அழிக்க என்றால்): மன்மதனை எரிக்க வென்றால் ஏற்கும்; மதன் - செருக்கு, மன்மதன், 'இசையார் விறகு விற்றது செருக்கை எரிப்பதற்கு ஏலும்' எனக் கொள்க. இவண், செருக்கு (மதன்) ஏமநாதன் கொண்டது.

42. திருமுகங் கொடுத்தது

(பாணபத்திரனுக்குப் பரிசில் பல வழங்குமாறு சேரமான் பெருமாள் நாயனாருக்கு இறைவன் திருமுகம் (கடிதம், ஓலை) கொடுத்தது.)

வாரணத்தை ஈன்ற மதுரேசர் பாணனுக்காச் சேரலன்பால் ஈந்தார் திருமுகமொன் றம்மானை; சேரலன்பால் ஈந்தார் திருமுகமொன் றாமாகில் ஆரணஞ்சொல் லைமுகமே லாறுண்டோ அம்மானை; ஆறுமுகம் பெற்றவரென் றாரறியார் அம்மானை.

(பொ-ரை) மூத்த பிள்ளையாரைப் பெற்ற சொக்கநாதர் பாணபத்திரனுக்காகச் சேரமானிடம் திருமுகமொன்று தந்தார் அம்மானை; சேரமானிடம் திருமுகமொன்று தந்தாரே ஆயினால், வேதங்கள் சொல்லும் ஐந்து முகங்களின் மேல் ஆறு முகமும் உண்டோ அம்மானை; ஆம்; அவர் ஆறுமுகம் பெற்றவர் என்பதை எவரே அறியார் அம்மானை.

(வி - ரை) வாரணம் - யானை; என்றது பிள்ளையாரை.

திருமுகம் -கடிதம், அழகிய முகம். ஆரணம் -வேதம்; ஐமுகம் - நான்கு திக்குகளிலும் ஒவ்வொரு முகமும் அதோ முகம் என்பதொன்றும் ஆக ஐந்து முகம்; ஆறு உண்டோ- ஆறுமுகம் உண்டோ ; ஆறு (கங்கை) உண்டோ; ஆறுமுகம் பெற்றவர் ஆறு முகத்தைப் பெற்றவர்; அமைதியான முகத்தைப் பெற்றவர். பெற்றவர் - பெற்றோர்; பெற்றவர்; ஆரறியார் -எவரே அறியார். சேரலன் பால் சேரனிடத்து; சேரல் + அன்பால் - சேரும் அன்பினால்.

-