உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

-

இளங்குமரனார் தமிழ்வளம் 38

போரில் ஆண்மை காட்டுதலும், போரில் தோற்றுத் துயருறுவார்க்கு ஓடிப்போய் உதவுதலும் உயர் வீரம் ஆகலின் அவ்வாறு இறைவர் பன்றிக்குட்டி மேல் பரிவுகாட்டினார் என்றார். அன்பே சிவமாக அமர்ந்தாராகலின் அவருக்கு அன்பு இயற்கையாம் எனினும் ஆம்.

47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்தது

(பாவத்தால் கரிக்குருவியாகப் பிறந்த ஒருவன், இறைவனைத் தவறாது வழிபட்டான். அவனுக்கு இறைவன் மந்திரப் பொருள் உரைத்தான். அக்கரிக்குருவி தான்மட்டுமே அனறித் தன் இனத்திற்கும் வலிமை வேண்டுமென இறைவனிடம் வேண்டிப் பெற்றது. அதன்பின் வலியன், வல்லூறு, வல்லான் எனப் பெயர் பெற்று விளங்கலாயது)

உண்மை கரிக்குருவிக் கோதியெளி யார்வலியார்க்(கு) எண்மடங்காக் கினர்மதுரை ஈசனார் அம்மானை; எண்மடங்காக் கினர்மதுரை ஈசனார் ஆமாகில் அண்ணலெளி யார்க்கெளியா ராவதேன் அம்மானை; ஆவதுபோல் தானலைந்தார் ஆரூரில் அம்மானை.

(பொ-ரை) மெய்ப்பொருளைக் கரிக்குருவிக்கு ஓதி எளிய தாம் அதனை வலியவர்க்கு எட்டுமடங்கு வலியதாக ஆக்கினார் மதுரைச் சொக்கர் அம்மானை; எண்மடங்கு வலியதாக ஆக்கினார் என்றால் பெருமைக்குரியவராம் அவர்மட்டும் எளியவர்க்கும் எளியவராக ஆவது ஏன் அம்மானை; ஆ! அவ்வாறு எளியவர்க்கு எளியவர் போலவேதான் திருவாரூரில் அலைந்தார் அம்மானை.

-

(வி-ரை) உண்மை மெய்ப்பொருள்; எளியாரை வலியார் ஆக்கியவர் தாம் ஏன் எளியராக ஆரூரில் அலைந்தார் என்றார்க்கு, அது போல்தான் அலைந்தார். ஏனெனில் எளியவர்க்கு எளியனாம் தன்மையன் ஆகலின். ஆரூரில் அலைந்தது சுந்தரர்க்காக. ஆரூரில் பரவையார் இல்லத்திற்குத் தூதுரைத்தற் காக; ஆவதுபோல் -ஆ! அதுபோல்; ஆவது போல்; பசுவைப் போல்; கன்றையிழந்த பசு ஆரூரில் எவ்வாறு அலைந்ததோ - உருகி உருகித் திரிந்ததோ -அதுபோல் என வுவமைப் பொருளும் கொள்க. 'ஏனலைந்தார்' என்பது பாடம்; ஏற்குமேல் கொள்க.

-