உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

48. நாரைக்கு முத்தி கொடுத்தது

215

(இறையன்பில் முதிர்ந்த நாரையொன்று பொற்றாமரைக் குளத்தில் தொடர்ந்து நீராடி வழிபாடு செய்துவந்தது. அதன் செயலுக்கு மகிழ்ந்த இறைவர் முத்தியருளினார். அந்நாரை விருப்பப்படிப் பொற்றாமரைக் குளத்தில் மீன் இல்லாமல் செய்தார்.)

மின்னார் மணிகயற்கண் மேவுசுந்த ரேசர்வந்து நன்னாரைக் கோர்வீடு நல்கினார் அம்மானை; நன்னாாரைக் கோர்வீடு நல்கினார் ஆமாகில் முன்னமனைக் கையான் முடிப்பரோ அம்மானை; முடிக்கவல்லார் காலாலே முன்னமனை அம்மானை.

(பொ-ரை) மங்கையர் மணியாகிய கயற்கண்ணிக்கு அன்பராம் சொக்கநாதர் நேரில் காட்சி வழங்கி நல்லதாம் ஒரு நாரைக்கு ஒப்பற்ற வீடுபேறு நல்கினார் அம்மானை; நாரைக்கு ஒப்பற்ற வீடுபேறு நல்கினாரென்றால், அத்தகையவர் முன்னமே வீட்டைக் கையால் கட்டிமுடிப்பரோ அம்மானை; முன்னே நமனின் செருக்கைக் காலாலே ஒழிக்க வல்லவர் அவர் அம்மானை. (வி-ரை) மின்னார்

-

மின்னற் கொடிபோன்ற மகளிர்; மேவு -அடையும்; வீடு - வீடுபேறு; வீடுபேறு நல்கினார் என்றமையால், கையால் வீடு கட்டிவைத்தாரோ என வினவினார். முன்னமனை - முன்னம் மனை; முன் நமனை (எமனை); எமனைக் காலாலே உதைத்தாராகலின் காலாலே முன்னமனை முடிக்க வல்லார் என்றார். கூற்றத்தின் செருக்கை ஒழிக்க வல்லவர் வீடுதருவதற்கு ஐயமென்ன என நிறுவினார். பிறப்பு இறப்பிலா நிலையே வீடுபேறு ஆகலின். இனி 'முன்னம் அனைக்கையால்’ எனப் பிரித்து முதற்கண் தாயன்பு சுரக்கும் கையால் எனப் பொருள் கொள்ளலுமாம்.

49. திருவாலவாயானது

(ஊழியால் மதுரை அழிந்ததாக வங்கிய சேகர பாண்டியன் வேண்டுகோட்கு இணங்கி இறைவன் ஒரு பாம்பை விடுத்து நகர எல்லை காட்டச் செய்தது. அதனால் திருவாலவாய் (ஆலவாய் பாம்பின் வாய்) என்னும் பெயர் பெற்றது என்பது கதை)