உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை

குன்றமர்ந் துறைதலும் உரியன்; அதாஅன்று

9

(கு - ரை) 67. செருப்புகன்று - போர்க்கு அறைகூவி; 68. வரிப்புனைபந்து வரிந்து கட்டப்பெற்றபந்து; பாவை-பெண் வடிவாகிய பதுமை; பொருநர் - போர் செய்வார்; 69. போர் அருவாயில் - போர் அரிதாகிய (இல்லையாகிய) வாயில்; 70 திருவீற்றிருந்த - அழகு கொழிக்கும்; திருமகள் தங்கிய; நியமம் - கடைத்தெரு; 71. மலி மிகுந்த; மறுகு - தெரு; குடவயின் மேற்கில்; 72. வாய் அவிழ்ந்து - மலர்ந்து; 73. தாள் - அடி; துஞ்சி - உறங்கி; 74.கள் - தேன்; நெய்தல் - குவளை; எற்பட -கதிரோன் எழ; 75.காமர் அழகிய; 76. அம்சிறை அழகியசிறகு, உள்ளொடுங்கிய சிறகு (அகம் சிறகு); அரிக்கணம் - அழகிய கூட்டம்;

-

அதுவன்றியும் கேட்பாயாக:

-

உ. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

(உ - டை) கூர்மையான நுனி அமைந்த தோட்டி (அங்குசம்) அழுத்துதலால் ஆழமான தழும்பு தோன்றுவதும், புள்ளிகள் நிரம்பிய நெற்றிப்பள்ளத்தில் அணிந்த பட்டத்துடன் வாடாத பொன்மாலை கிடந்து அசைவதும், பெரியமணிகள் இருபுறங் களிலும் தொங்கிப் பேரொலி செய்வதும், கடிய நடையுடைய கூற்றுவனே போன்றதாய் எவராலும் விலக்குதற்கு அரிய வலிமையுடையதும், காற்றுக் கிளர்ந்து எழுந்தாற்போன்ற செலவுடையதும் ஆகிய யானையின் மேலே திருமுருகன் அமர்ந்துள்ளான்.

ஐந்து வேறுவகைச் செயல் திறமையால் முடிக்கப்பெற்ற அவன் திருமுடியின்மீது, ஒன்றை ஒன்று விஞ்சுவதாய்ப் பன்னிற ஒளிசெய்யும் அழகிய மணிகள் மின்னல் போன்ற ஒளியால் தலைக்குப் பொலிவு தருகின்றன.

ஒளிதங்கி அசையும் வேலைப்பாடமைந்த பொன்னால் செய்யப்பட்ட மகர குண்டலங்கள், மிகத் தொலைவிடத்தே விளங்கும் இயல்புடைய ஒளிமிக்க முழுமதியைச் சூழ்ந்து அகலாது விளங்கும் விண்மீன்கள் போல ஒளியுடையனவாய்த் திகழ்கின்றன.

குற்றமற்ற உயர்ந்த கொள்கைகளை யுடையவர்களாய்த் தம் தவத்தொழிலை முடிக்கும் பெரியவர்கள் உள்ளத்தில் அழகுறத் தோன்றுகின்ற ஒளிமிக்க ஆறு திருமுகங்களை யுடையவன் அவன். (78-90)