உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

இளங்குமரனார் தமிழ்வளம்

-

39

சிக்கல் இல்லாத தனி வாழ்வில்லை; குடும்ப வாழ்வில்லை; பொது வாழ்வில்லை!

முட்காட்டில் நடந்தால் உடையிலும் உடலிலும் முன்படுதல் எப்படி இயல்போ அப்படி இயல்பானது சிக்கல்! "நெடும் பாம்பு வழங்கும் தெரு" என்பது குறுந்தொகை. "இன்னா தினனில்ஊர் வாழ்தல்" என்பது குறள்.

நூல் நூற்றலிலும், கயிறு திரித்தலிலும், பாவு நெய்தலிலும், தலை கோதலிலும் எவ்வளவு கருத்தாக பொறுமையாக ஈடுபாடுவார்க்கும் அவற்றில் சிக்கல் ஏற்படாமலா போகின்றது?

அச்சிக்கல்களை அவர்கள் விரைந்தோ சஞ்சலித்தோ சினந்தோ நீக்க நினைத்தால், விளைவு என்ன ஆகும்?

சிக்கல் பெருஞ்சிக்கலாய் - தீராச் சிக்கலாய் -அழிவுக்கும் இழப்புக்கும் இடமாகியே முடியும்! அப்படியே, வாழ்வியற் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் பொறுமையாய்ச் சிந்தித்து, முனைப்பை அகற்றி, மும்முரமாக எண்ணி, ஆற அமர ஆய்ந்து திட்டமாக - தெளிவாகத் தீர்வு காணமுடியும்!

நாம் தாமா உலகின் முதற்பிறப்பு? நம் சிக்கல்தானா உலகின் முதற் சிக்கல்? உலகம் எத்தனை எத்தனை கோடிப் பேர்களைக் கொண்டது! எத்தனை எத்தனை கோடிச் சிக்கல் களைக் கண்டது! அவர்களெல்லாம் சிக்கலுள் சிக்கித் சீரழிந்தோ போய் விட்டனர்? சிக்கலை அவிழ்த்துச் சீர்மையாய் வெற்றி கண்டு அச்சிக்கல்களெல்லாம் மண்டியிட்டுக் கிடக்கப், பலப்பலர் சிக்கல்களையும் தாமே தீர்க்க வல்ல திருத் தோன்றல்களாக எத்தனை பேர் விளங்கியுள்ளனர்? அத்தகைய பெருமக்களுள் உலகுக்கு ஒரு மாமணியாய் ஓங்கிய திருமாமணியாம் ஒருவர் திருவள்ளுவப்பெருந்தகை!

வாழ நூல் செய்த வள்ளுவர், வாழ்வாங்கு வாழ வழி காட்டியாகவும் வள்ளுவம் செய்தார். வாழ்வாங்கு வாழ்வார்க்கு உண்டாகும் வாழ்வுச் சிக்கல்களையும் வளமாக எண்ணித் தீர்வுகளும் வழங்கியுள்ளார். அவற்றுள், தனிவாழ்வுச் சிக்கல் தீர்வு உண்டு; குடும்ப வாழ்வுச் சிக்கல் தீர்வு உண்டு; பொது வாழ்வுச் சிக்கல் தீர்வு உண்டு. பொருளியல், அரசியல் முதலாம் பிறவியல் தீர்வுகளும் உண்டு. இவற்றுள் முன்னவையாம் மூன்று சிக்கல்களையும் முறையே எடுத்துக் கொண்டு கூறும் மூன்று கட்டுரைப் பொழிவு இச்சுவடியாகும்.