உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

211

உரியவை எவை என்பதை வழிவழியாக வருமுறைப்படி உண்டே வாழ்கின்றன.

ஆடு மாடுகள் சிலவகை இலை தழை புல் பூண்டுகளைத் தின்பதில்லை. தின்னத் தக்கனவற்றின் ஊடே தின்னத் தகாதது ஒன்று இருப்பினும் அதனை விலக்கியே உண்கின்றன. ஒருவேளை ஆகாத ஒன்று வாய்க்கு மற்றவற்றோடு வந்து விட்ட தெனினும், அதனைத் துப்பி விடவே செய்கின்றன. இயல்பான அவற்றின் உணவு முறை மாந்தர் முறையினும் எவ்வளவு உயர்ந்ததாக உள்ளது! நோயுற்ற விலங்கு வாயசைவு போடுவதையும் தவிர்க்கிறதே! நீர்க் குடியையும் கூட விலக்கி விடுகிறதே! ஆனால் மாந்தர் இயல்பு எப்படியுள்ளது?

வேளை

சுவைமிக்க உணவு வாய்த்து விட்டால் என்ன, அந்த ஒரு உணவே வாழ்வுக்குப் போதுமானதாகி விடுமா? ஆண்டளவுக்கும் வேண்டா என்றாகி விடுமா? மறுவேளை உணவை ஒழிக்க வேனும் அந்த அறுசுவை உணவு உதவுமா? உதவாத அதனை, வயிறு கொள்ளாத அளவு உண்டு, வாராத் துயர்களையெல்லாம் வருவித்துக் கொள்ள வேண்டுமா?

"உங்கள் உடலுக்கு இன்ன இன்ன உணவுகள் ஆகா!” என மருத்துவர் கட்டளையிடுகின்றார். நோயர் அனைவரும் ஏற்கின்றனரா? மருத்துவர் சொன்னபடியெல்லாம் கட்டுப் பாடாக இருப்பார் உறுதியானவர், உறுதிப் பற்றாளர். அதனால் பற்றியம், என மருத்துவர் கட்டளைக்குப் பெயர் உண்டாயிற்று. பற்றியம் 'பத்தியமாக இந்நாள் வழங்குகின்றது!

உண்ணா நோன்பு, உரையா நோன்பு என்பனவெல்லாம் 'நோன்பு' எனப்படுவானேன்? நோல், நோன், நோன்பு என்பனவெல்லாம் உறுதிப்பாடு என்னும் பொருளன. தன் துயர் தாங்கும் உறுதிப்பாட்டை "உற்ற நோய் நோன்றல்" என்று கூறும் வள்ளுவம் (261). "உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்" (160) என்றும் கூறும்.

'உணவு'க்கும் 'உணர்வு' க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சொல்லமைதியிலே மட்டுமன்று; அதன் தன்மையிலேயும் தொடர்பு உண்டு; சுவைக் கட்டுப்பாடு உடையவர், பிற கட்டுப் பாடுகளின் மூலங்கண்டவர், முறைகண்டவர், முழுமை கொண்டவர். அதனால், பொறி புலன்களின் அடக்கம் விரும்புவார், சுவைக்கட்டுப்பாட்டாளராக நாக்கட்டுப் பாட்டாளராக இருக்க வேண்டும். “யாகாவா ராயினும் நாகாக்க”

-