உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

217

கொள்ளவும் செய்கின்றனர். சிலர் முன் சினத்தை, தம் அறியார் தனத்தால் பெருமையாகவும் கருதிக் கொள்வார் போலும்! தம் தவற்றை அறிந்தும் மீளவும் மீளவும் அதனை செய்வர் எனின், அதில் பெருமை காண்கின்றனர் என்று தானே கருதவேண்டும்!

சிடு சிடுச் சினம் அடக்கமில்லாமைக்கும், வலிமை இல்லா மைக்கும் சான்று. நரம்புத் தளர்ச்சிக்கும் நாடித் துடிப்புக்கும் சான்று. என்ன சொல்கிறோம்; என்ன செய்கிறோம் என்று அறியாமல் செயல்படும் கொடுமையை ஒருவர் வைத்துக் கொண்டிருந்தால் அவர் எப்படிப் பாராட்டும் தன்மையர் ஆவர். பாராட்டும் தன்மைகள் அவரிடத்து இருப்பினும் அவற்றையும் பாழாக்கி விடுமே இச்சிறு சினம்!

கருத்துப் பிழைகளைக் கண்ட போதெல்லாம் சினம் கொண்ட சீத்தலைச் சாத்தனார் தம் தலையில் எழுத்தாணி யாலே குத்திக் கொண்டார் என ஒரு கதை வழங்குகின்றதே! அது "தலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு’

என்னும் வள்ளுவமாலை கொண்டு புனைந்த புனைவு. சீத்தலை என்பதோர் ஊர். அவ்வூரினர் சாத்தனார். ஆகலின் சீத்தலை சாத்தனார் ஆனால். அவரைச் சீழ்த்தலையர் ஆக்கிச் சினத்தரும் ஆக்கிய 'புனைவு' இது.

கெய்சர் என்பான் ஒரு வேந்தன். அவனுக்குச் சினம் வந்தால் தன் காதைத் தானே திருகிக்கொள்வான் என்பது

வரலாறு.

"என்னால் சினத்தை அடக்க முடியவில்லையே! அடக்கத் தான் நான் நினைக்கிறேன், முடியவில்லை" என்பார். அச்சிக் கலைத் தீர்த்துக் கொள்ள வள்ளுவப் பேராசான் நல்வழி காட்டுகிறார்.

சினத்திற்கு ஒரு பட்டப் பெயர் சூட்டுகிறார் வள்ளுவர். அது 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பது.

சேர்ந்தாரைக் கொல்வது நஞ்சும் தீயுமாம். இவ்விரண்டும் கூட, சேர்ந்தாரை மட்டுமே கொல்லும். சினமாகிய சேர்ந்தாரைக் கொல்லியோ சேர்ந்தாரை மட்டுமின்றி, அவர்க்குப் பாதுகாப்பாக உள்ள இனத்தையும் கொல்லும் என்கிறார்.

"சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்"

(306)