உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

223

அறிவு அறிவுதானா எனக் கருதியவராய் அவரறிவு காரறிவு என்கிறார். காரறிவு என்பது வெள்ளுவாவுக்கு எதிரிடையான காருவாப் போலும் அறிவு. பாழறிவு அது. அறிவின் இயல்பு பிறிதிங்க நோயைத் தன் நோய் போல் போற்றிக் கொள்ளல் ஆகும். ஆனால் இக்காரறிவோ பிறிதொன்றைத் தேடிப் போய் அது தேடி வைத்ததை எல்லாம் திருடிக் கொண்டு வந்து விடுகின்றது. பொருட்பறிமட்டுமன்றி, உறுப்புப் பறி, மானப்பறி, உயிர்ப்பறி ஆகிய எல்லாமும் கூடச் செய்கின்றது. மருத்துவர் கத்தி, கொலையாளன் கைக் கத்தியாகி விட்டது போல் வாலறிவு காரறிவாகி விட்ட நிலை இது என்கிறார்.

களவு என்னும் இக்காரறிவு எவர்க்கு உண்டு?

அளவோடு வாழ்வு நடத்துவோம் என்பது இல்லா தவர்க்கு உண்டு!

“களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார் கண் இல்."

என்பது அது.

(287)

களவு வழியால் வரும் ஆக்கம் ஆக்கமா? ஆக்கம் கெடுப்பதை ஆக்கமெனக் கொள்வது அறிவா? அளவு கடந்து பெருகுவது போலத் தோற்றந்தந்து இல்லாமல் ஒழிவது அல்லவோ திருட்டுப் பொருள்! முறையாக வரும் பொருளே முறைகேடனிடத்து நில்லாது ஒழிய முறையற்றவனுக்கு முறைகேடாக வந்த பொருள் தானா நின்று பயன் தரும்? தட்டிப் பறித்த பணம் கொட்டித் தெலைக்கும் வழிகளுக்கே போய், பழிமேல் பழியாய் குற்றத்தின் மேல் குற்றமாய்ப் பெருக்க அல்லவோ செய்யும்?

ஒரு நாள் ஓரிடத்துக் களவை மறைத்து விடலாம். களவு செய்த கை சும்மா இராதே! களவு கொண்ட மனம் ஓயவிடாதே! அது களவாளன் கையிலும் காலிலும் விலங்கு பூட்டிக் கடுஞ்சிறைக்கும் கொடுந்தண்டத்துக்கும் ஆட்படுத்தாமல் விடாதே! ஆதலால்,

“களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்"

என்றும்,

'களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்

(283)

(284)