உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

வீட்டரசொடு நாட்டரசு மிக்க நெருக்கமுடையதாகி விடுதல் கண்கூடு குடும்பத்தவர் தெரிவுதானே ஆளுரிமை வாக்காகி நிற்கின்றது!

இந்நாள் குடியரசில் குறைகள் பல நிகழ்வானேன்? குடிகள் தக்க குடிகளாக இல்லாக்கால் குடியரசும் சீர் பெறாதாம்! தனிவாழ்வும் குடும்பவாழ்வும் செம்மையுறப் போற்றப்படும் நிலையிலேயே பொது வாழ்வும் சிறக்கும் என்பது சொல்ல வேண்டுவதில்லையே!

""

மக்கள் என்று வாளா கூறாமல் "அறிவறிந்த மக்கள் என்றும் (61) "பழிபிறங்காப் பண்புடை மக்கள்" என்றும் (62) மக்கட் பேற்றின் முதலிரு பாடல்களிலேயே குறித்தார் வள்ளுவர்.

அறிவறிந்த மக்களாகவும் பழிவழிச் செல்லாப் பண்புடைய மக்களாகவும் இருந்துவிடின் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளும் தகுதி பெற்றோர் தகவிலாச் செயல் செய்வரா? அப்படி ஓரொரு கால் செய்யினும் மக்கள் இடித்துரைத்து முறை காட்டாது இருப்பரா? இடித்துரைத்தல் என்பதுதானே ஆள்வோர் முறையாக நடந்து கொள்ள வாய்த்த அழிவிலாப் பாதுகாப்பு! அதனைக் கொள்ளா ஆட்சி கெடுப்பார் இன்றியும் கெட்டுப்போம் என்று வருமுன் காக்க வகுத்துரைக்கிறாரே வள்ளுவர். ஆதலால் குடிநலம் காக்கவல்ல மக்களே அரசு நலம் காக்கும் மக்களாம் என் அடிப்படை காட்டி அமைவோம்.

-

-

-

இந்நாளில் பெரு நோயாய் தொற்று நோயாய் புற்று நோயாய் கேடு செய்யும் மாப்பிள்ளைக் கொடையாம் வரதட்சணைச் சிக்கல் தீர்க்க வள்ளுவம் கூறும் வகை என்ன என வினவத் தோன்றலாம்.

இச்சிக்கல் எவரிடமிருந்து அரும்பி முகிழ்த்து மலர்ந்துள்ளது என எண்ணின் உண்மை புலப்படும்!

தம்மை மேல் குடியினராகவும் மேட்டுக் குடியினராகவும் எவர் கொண்டிருந்தாரோ அவர் வித்திய வித்தின் விளைவு இது! இந்த அறுவடையைத் தந்நலப் பெருக்குடைய கற்றோரும் வணிகரும் பிறர் பிறரும் பற்றிக் கொண்டனர். பற்றிக் கொண்ட அளவில் நில்லாமல், பற்றி எரிந்து பெண்ணினம் மடியவும் வெறிச் செயல் ஆற்றத் துணிந்து விட்டனர்! தாம் விலை மாடாகி விட்டமை உணராமல் விலை தந்த கொடையாளியையே கொம்பால் குத்திக் குலைக்கும் வெறிமாடும் ஆகிவிட்டனர்!