உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

283

மதுக்குடி தனிவாழ்வுக் கேடு; குடும்ப வாழ்வுக்கேடு; பொது வாழ்வுக் கேடு! முக்கேடுகளைச் செய்வதன்றி எக்கேட்டுக்கும் தலைமை தாங்குவதும் அது.

"மகவைக் கொல்லுதல்; மாதை அழித்தல்; மதுவைக் குடித்தல் என்னும் முக்குற்றங்களுள் எக்குற்றமேனும் ஒன்றை நீ செய்யலாம் என்று ஒருவனிடம் கூறப்பட்டது. அவன், மகவைக் கொல்லுதல் கொடுமை; மாதைக் கெடுத்தல் கயமை; மதுவைக் குடித்தலால் என்னளவில் தானே தீமை என அதனைக் குடித்தான். அக்குடி வெறி, மாதைக் கெடுத்தது; மகவைக் கொன்றது; முக்குற்றங்களுக்கும் முழுக்குற்றம் மதுக்குற்றம் என்னும் நிலையைப் பெற்றது" என்பதொரு செய்தி.இது புனைவே எனினும் குடியர் செய்யும் செயல்களைக் காணின் இப் புனைவின் உள்ளியல் புலப்படவே செய்யும். வள்ளுவ வழியரசு கள்ளினை மதுவகைகளை நடமாட விடவே விடாது என்க.

மதுவிலக்கால் நாட்டு வருவாய் குன்றுமே! குடியை இல்லாமல் ஒழிக்க இயவில்லையே; கள்ளச் சரக்குகளால் பெருந்தீமைகள் உண்டாகின்றனவே என்றெல்லாம் காரணம் கூறுதல் கடமையைத் தட்டிக்கழித்து கயமைக்கு உடன்போவதே யாம்! அவ்வப்போது ஆளும்கட்சி சார்ந்தவர்களே மிகுதியும் மதுவிற்பனை உரிமையாளராகத் திகழ்தலும், காவல் துறையும் மதுவிலக்குத் துறையும் கைகட்டி நின்றும், கைநீட்டி நின்றும் இருவகையாலும் ஏவல் பணியராக இயல்வதும் ஆட்சியாளர் தன்னலமே மதுவிலக்கை விலக்கல் என்பதாம்.

திருட்டு, தீ வைப்பு, கொள்ளை, கொலை, கையூட்டு, வஞ்சம்,நஞ்சம் என்பவற்றை எவ்வளவு முயன்றும் காலம் காலமாகக் கருதி முயன்றும் கட்டுப்படுத்த இயலவில்லை; ஆதலால் இவற்றைச் செய்ய உரிமை வழங்குவோம் என்று ஆள்வோர் சொல்லவும் துணிவரோ?

தனியாளால் செய்யமுடியாததைச் செய்வதற்காகத் தானே தனியாளர் வழங்கிய வாக்குகளைப் பெற்று ஆட்சிக் கட்டில் ஏறியது? அதனைச் செம்மையாகச் செய்ய முடியாமல் சோரம் போகும் அரசு, ஆட்சிக் கட்டிலில் இருக்கும் உரிமை உடையது ஆகுமா?

அஞ்சு நிலை

அஞ்சுதற்கு அஞ்சவேண்டும்; அஞ்ச வேண்டாதவற்றுக்கு அஞ்சதல் ஆகாது என்பது வள்ளுவம்.