உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வழிநடை

45

இறங்கச் செய்து வண்டிக்குப் பின்னே இருந்து தள்ளினார். வண்டி எளிமையாய்ச் சென்றது. தொண்டு செய்வார்க்கு இது தொண்டு அது தொண்டு என்பது இல்லையே!

“ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல்.”

என்பது 'வள்ளுவ வழிநடை' என்பதைக் கண்டோமே! அவர் போனதும், மருத்துவமனை உருவாக்க வேண்டும்! அது வரை மருத்துவத்தை நிறுத்த முடியாது! நீகிரோ மக்களோடு உறவாட அவர்கள் மொழியறிவு வேண்டும். ஒரு வீட்டை வாடகைக்கு அமைத்தார். மொழிபெயர்ப்பாளர் ஒருவரை வைத்துக் கொண்டார். மருத்துவப் பணியைத் தொடங்கி விட்டார்.

மலேரியா காய்ச்சல்,தூங்குநோய், குட்டம், யானைக்கால், நுரையிரல் கோளாறு, வயிற்றுக் கடுப்பு என்பவை அங்கிருந்த மிகுதியான நோய்கள். தம் பொருளையும், பொழுதையும் முழுமையாகச் செலவிட்டு உயிர்ப்பணி புரிந்தார் சுவைட்சர்.

1914 இல் உலகப் போர் வந்தது. சுவைட்சர் செருமனி நாட்டவர் ஆபிரிக்கா பிரான்சு நாட்டைச் சேர்ந்தது. அங்கு செருமனியர் மருத்துவப் பணி செய்யவிடக்கூடாதே எனச் சிறைப்படுத்தப்பட்டார். தொண்டுள்ளத் துலக்கம் கொலையுள்ளச் சிறைக்கு ஆட்பட்டது. “அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை" என்பது மெய்ம்மறை. ஆனால், நோயர்க்கு அல்லல் இல்லாமல் ஒழியுமா? அதற்கு அருளாளர் உள்ளம் உருகாமல் ஒழியுமா? மீண்டும் மருத்துவப் பணிக்கு விடுதலை செய்யப்பட்டார்.

கொண்டு சென்ற செல்வம் தீர்ந்தது. பிணி தீர்க்கும் பணிக்கு மேலும் செல்வம் தேவைப்பட்டது. ஐரோப்பாவுக்கு வந்து இசையாமலும் பொழிவாலும் செல்வம் திரட்டிக் கொண்டு மீண்டும் ஆபிரிக்காவுக்குச் சென்றார். சுவைட்சர் மருத்துவமனை எழுப்பினார். மருத்துவர்களை உருவாக்கினார். பல்கால் வெளிநாடுகளுக்குச் சென்று பணம் திரட்டி மருத்துவமனை சிறக்க வழிகண்டார். போர் முடிவால் பிரான்சுத் தொடர்பு இல்லாமல் ஆயிற்று. அமெரிக்கத் தொடர்பு வளர்ந்தது. உதவியும் பெருகிற்று. அவர் புகழ் உலகப் புகழாக வளர்ந்தது. பிறர்கென வாழும் பெருந்தகை எனப் பாராட்டப்பட்டார். 1953 இல் அவர் பணிக்காக 'நோபல் பரிசு' கிடைத்தது. உள்ளத்தால் பொய்யாது ஒழுகியவர் சுவைட்சர். அவர் நூலறிவு, நுண்ணறிவு, பட்டறிவு