உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

பேரன்பின் இனியீர், வணக்கம்.

‘வையகம் தழுவிய வாழ்வியல்,' என்னும் இந்நூல் தஞ்சைத் திருக்குறள் பேரவையின் மூன்றாம் வெளியீடாகும்.

திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளை இளைஞர் முதல் பெரியோர் வரையுள்ள எல்லோரும் நன்கு அறிந்து, தம் வாழ்வில் கொண்டு ஒழுக வேண்டும் என்பது என் ஆவல். தமிழகத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வகையில் தமிழ்த் தொண்டு புரிந்து வரும் தமிழ்க்கடல் இரா. இளங்குமரனார் அவர்களிடம் என் உள்ளக் கருத்தைக் கூறி, பேரவையில் வெளியிட ஒரு நூல் எழுதித்தாருங்கள் என்று வேண்டிக் கொண்டேன். என் உள்ளத்தைத் தெளிவுற உணர்ந்து கொண்ட தமிழ்க்கடல் அவர்கள், உலகத்தின் நடைமுறைச் செய்திகளை எளிமையாக - இனிமையாக நல்ல தமிழில் எடுத்துக்காட்டி, திருக்குறள் கருத்துக்களைப் படிப்போர் உள்ளத்தில் பதிய வைக்கும் திறனோடு 'வையகம் தழுவிய வாழ்வியல்' என்னும் செம்மாந்த நூலை இயற்றி வழங்கினார்கள்.

அவர்தம் தூய்மையும் துவளாப்பணிகளும், அறிவார்ந்த செயல்களும் என் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தன. அவர்கள் வழங்கிய 'வையகம் தழுவிய வாழ்வியல்' என்னும் நூலை வெளியிடுவதில் திருக்குறள் பேரவை பெருமையும் பெருமிதமும் கொள்கிறது. தமிழ்க்கடல் அவர்கள் அறிவார்ந்த மக்கட் பேறுகளில் நல்லிடம் பெறுகின்றார்கள். நாமும் நாடும் உலகும் நன்றிக்கடன் ஆற்றுவோம்.

நூல் பேரவையின் வெளியீடாக வருவதற்கு நம் பேரவையின் தலைவர். குறள் நெறிச் செல்வர் சி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள் உருபா ஐயாயிரம் வழங்கி உதவி புரிந்தார்கள்.