உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

சுமைப் பொருள் கண்ட தலைவனும் திகைத்தான்.

காவல் வீரரும் திகைத்தனர்.

தந்த ஆணையைத் தடுத்து நிறுத்தல் அறமன்று என்று தன்னைத் தடுத்துக்கொண்டு தான் தந்த சொல்லைக் காத்தான் பகைவன் எனினும் பண்புசால் பெருமை வீரன்! என்ன கொண்டு சென்றனர் பெண்டிர்?

அவரவர் கணவன்மாரைச் சுமந்து சென்றனர்.

அவர்கள் விரும்பும் பொருள்கள் அவர்கள் கணவரினும் உயர் பொருள்களாக இல்லை என்பதை மெய்ப்பித்தனர்.

மகளிர் துணிவும் அறிவும் மட்டுமோ பாராட்டுக்கு உரியவை! அவர்கள் தம் கணவன்மார்மேல் கொண்ட காதலை அளக்க அளவுகோல் உண்டோ?

கற்பித்துத் தந்த கற்பா இஃது?

கற்பித்துத் தந்தார்தாம் எவர்? அவரே கற்றுக் கொண்ட கற்பன்றோ ஈது?

உலகக் கற்பெலாம் ஓருருவாகிய அப்பெல்சியப் பெண்டிர் பெருமையே பெருமை!

அப்பெருமை பகைவரும் பாராட்டிய பெற்றியதென்னின். அந்நாட்டவராலே எப்படிப் பாராட்டப் பெற்றிருக்கும்! நாட்டவர் பாராட்டிய பாராட்டு, அந்நாள் தொட்டு நாளும் நாளும் தொடர்ந்து இன்றும் நாட்டப்பட்டே வருகின்றனது.

ஒவ்வோராண்டும் சனவரித் திங்கள் பத்தொன்பதாம் நாள் பெல்சிய நாட்டிற்குப் "பெண்டிர் விழா" எனப்படும் பெருவிழா ஆதல் உலகறி செய்தி!

இத்தகு பெண்டிரை வள்ளுவர்க்கிழவர் கண்டாரோ! என்னே பெருநிலை என்னே பெருநிலை என்று வியந்து நின்றாரோ?

அதனால்,

"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்." (54)

என்றாரோ?