உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அகப்பொருள்

அகத்திணை:-

உள்ளத்தே நிகழும் இன்பவொழுக்கம். அது கைக்கிளை, குறிஞ்சித்திணை, பாலைத்திணை, முல்லைத்திணை, மருதத் திணை, நெய்தற்றிணை, பெருந்திணை என ஏழுவகைப் படும்.

அகத்திணையியல்:-

இன்பமாகிய ஒழுக்கத்தின் இலக்கணம், இன்பவிலக்கணம், அகத்திணை ஆவது அது.

அகத்திணைக்குரிய முதல் (அவத்தை) நிலை மெய்ப்பாடுகள்:-

புகுகின்ற முகத்தினை விரும்புதல், நெற்றி வியர்வையை அடையப் பெறுதல், நகையுண்டாதலை மறைத்தல், மனமழிதலைப் பிறர்க்குப் புலனாகாது மறைத்தல் ஆகிய நான்கும் அகத்திணைக் குரிய முதல் நிலை மெய்ப்பாடுகளாகும்.

அகத்திணைக்குரிய இரண்டாம் நிலையின் மெய்ப்பாடுகள்:-

கூந்தலை அவிழ்த்தல், காதிலணிந்த அணியைக் கீழே விழச்செய்து அதனைத் தேடுவதைப் போல நிற்றல், முறையாக அணிந்துள்ள அணிகளைத் தடவுதல், ஆடையைக் குலைத்து உடுத்தல் ஆகிய நான்கும் இரண்டாவது நிலையின் மெய்ப்பாடு களாகும்.

அகத்திணைக்குரிய மூன்றாம் நிலையின் மெய்ப்பாடுகள்:-

அல்குலைத் தடவுதல், அணிந்திருந்த அணிகளைக் களைந்து அணிதல், தம்மைச் சார நினைத்தாரைத் தமது இற்பிறப்புச் சொல்லிப் புணர்தற்கு இசை வில்லாரைப் போல மறுத்துக் கூறுதல், வேட்கை மிகுதியால் நாணழிதலில்முயங்கல் விருப்பத்தால் இருகைகளையும் மேலே தூக்குதல் ஆகிய நான்கும் மூன்றாம் நிலையின் மெய்ப்பாடுகளாகும்.