உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

167

தலைவியைப் புகழ்தலும், தோழி இறைவன் அளித்த கையுறையைப் புகழ்தலுமாம். பாங்கியிற் கூட்டல்-தலைவன் தலைவியை வீட்டிற்குச் செல்ல விடுப்பத் தோழி தலைவியை அழைத்துச் செல்லுதல்; உயங்கல்- தலைவன் இரவுக் குறிக்கண்வரும் வழியினது அருமையை எண்ணித் தலைவி வருந்துதலும், அதனால் தலைவன் வருந்திக் கூறுதலுமாம். நீங்கல்- தோழி தலைவியைக் குறிக்கண் செலுத்தி நீங்குதலும் தலைவியைத் தலைவன் புணர்ந்து நீங்குதலுமாம். இரவுக்குறியின் விரி:

தலைவன் தலைவியை இரவுக்குறிக்கண் கூட விரும்பித் தோழியிடம் இரவுக்குறி வேண்டுதலும், தலைவன் இரவுக் குறிக் கண் வரும் வழியினது அருமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதலும், தலைவன் இரவுக்குறிக்கண் வரும் வழியினது எளிமையைக் கூறுதலும், தோழி தலைவன் நாட்டுப் பெண்கள் அணியும் அணியையும், புனைதல், அணிதல் விளையாட்டிடம் முதலியவற்றையும் வினாதலும், தோழியின் குறிப்பறிந்து அவள் நாட்டு அணி இயலைத் தலைவன் வினாதலும், தோழி தன்னாட்டு அணியியலைக் கூறுதலும், தோழி தலைவனை ஓரிடத்து நிறுத்தித் தலைவி நிற்குமிடஞ் சென்று தலைமகன் குறையை யறிவித்தலும், இவ்வாறு தலைவன் குறையைத் தோழி கூறக் கேட்ட தலைவி உடன்படாது தன் நெஞ்சொடு கூறுதலும், இவ்வாறு நெஞ்சொடு புலந்து நின்ற தலைவி பின் பாங்கியோடு உடன்பட்டுக் கூறுதலும், தலைவி இருட்குறிக்கு உடன் பட்டமையைப் பாங்கி தலைவனுக்குக் கூறுதலும், தோழி தலைவனைக் குறியிடத்து நிறுத்தித் தாயினது உறக்கத்தை அறிதலும், தலைவிக்குத் தலைவன் வரவைப் பாங்கி உணர்த்தலும், தோழி தலைமகளைக் குறியிடத்துக் கொண்டு செல்லுதலும், தலைமகளைக் குறியிடத்துச் செலுத்தித் தோழி அகன்று போதலும், தலைவன் தலைவியை எதிர்ப்படுதலும், தலைவன் வரும் வழியை எண்ணித் தலைமகள் வருந்துதலும், தலைவன் தலைவியைத் தேற்றுதலும், தலைவன் தலைவியைக் கூடலும். தலைவியைத் தலைவன் புகழ்தலும், இருட்குறியின் ஏதத்தையஞ்சித் தலைமகள் தலைமகனை இரவுக்குறிக்கண் வரு தலை விலக்கலும், தலைவன் தலைவியை வீட்டிற்குச் செல்லென விடுத்தலும், தோழி தலைவியை அடைந்து கையுறை காட்டலும்,