உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

கற்பில் நிகழும் பிரிவின் வகை

183

தலைமகன் பரத்தை மேற்காதல் கொண்டு தலைவியைப் பிரிந்து பரத்தையர் சேரிக்குச் செல்லும் பரத்தையிற் பிரிவும், தலைவன் கல்வி காரணமாகப் பிரியும் ஓதற்பிரிவும், நாடு காத்தற் பொருட்டுப் பிரியும் காவற்பிரிவும், அரசர் இருவர் போர் செய்தவழி அவரைச் சந்து செய்விப்பதற்குப் பிரியும் தூதிற் பிரிவும், தன் நண்பனாகிய வேந்தனுக்குப் பகைவேந்தரால் இடையூறு நேர்ந்த விடத்து அவ்விடையூற்றை நீக்குதற் பொருட்டுப் பிரியும் துணைவயிற் பிரிவும், பொருள் ஈட்டுதல் காரணமாகப் பிரியும் பொருள்வயிற் பிரிவும் என ஆறுவகைப் பிரிவும் கற்புக் காலத்து நிகழ்வனவாம்.

கற்பிற்குரிய கிளவித் தொகை :

இல்வாழ்க்கை,

பரத்தையிற் பிரிவு, ஓதற் பிரிவு,

காவற்பிரிவு, தூதிற்பிரிவு, துணைவயிற் பிரிவு, பொருள்வயிற் பிரிவு ஆகிய ஏழும் கற்பிற்குரிய கிளவித் தொகைகளாகும். கற்பு மணம் :-

கற்பென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது சடங்கொடு பொருந்திக், கொள்ளுதற்குரிய முறைமையையுடைய தலைவன் கொள்ளுதற்குரிய முறைமையை யுடைய தலைவியைக், கொடுத்தற்குரிய முறைமையையுடை தலைவியின் சுற்றத்தார், தெய்வம், சான்றோர் மணஞ் செய்து கொடுப்ப மணந்து கொள்வதும், தலைவி தலைவனுடன் உடன் போக்கிற் சென்ற விடத்துக் கொடுத்தற்குரிய முறைமையையுடைய தலைவியின் தமர் இல்லாதவிடத்தும் சடங்கொடு கூடியமணம் நடை பெறுவதும் கற்புமணமாகும்.

கற்புக் காலத்துத் தலைவன்பால் நிகழும் நிகழ்ச்சி :

இருவகைக் கற்பின் கண்ணுந் தலைமகற்குக் களவிற் புணர்ச்சியும், வதுவைப் புணர்ச்சியும் உண்டு என்பதாம். காதற் பரத்தையர், காமக்கிழத்தியர், பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தியர் ஆகிய மூவகை மகளிரும் அந்நிகழ்ச்சிகளுக்கு உரிய மகளிராவர். இவர்களுள், காதற்பரத்தை களவிற்புணர்ச்சிக் குரியர். காமக்கிழத்தியும், பின்முறைவதுவைப் பெருங்குலக் கிழத்தியும் வதுவைப் புணர்ச்சிக்குரிய மகளிராவர்.