உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறையுற உணர்தல்

அகப்பொருள்

187

இது பாங்கிமதி உடன்பாடு என்னும் களவியல் கிளவித் தொகைக்குரிய வகைகளுள் ஒன்று. இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னே தலைமகளின் உயிர்ப்பாங்கியை அறிந்து அவளை வாயிலாகப் பெற்றுக் குறையுறுதலை வலியுறுத்தத் தலைமகன் கண்ணியும் தழையும் ஏந்திச் சார்ந்து நின்று பாங்கியின் ஊரும், பெயரும் கெட்ட பொருளையும் ஒழிந்தவும் வினாவியவிடத்து இவர் யாரெனவும், இவர் மனத்துளதாகிய எண்ணம் யாதெனவும், ஆராய்ந்தும் அவன் உள்ளத்து எண்ணத்தைத் தெளிந்தும் கூட்டமுண்மையைப் பாங்கி உணர்தல் குறையுற உணர்தலாகும். கூதிர்ப் பருவத்தின் தன்மை :

ஐப்பசி,கார்த்திகை

ஐப்பசி, கார்த்திகை ஆகிய இரு திங்களும் கூதிர்ப்பருவ மாகும். இப் பருவத்தில் கூதிர்க் காற்று வீசும். குருகும், அன்னமும், கொக்கும், சங்கும், நண்டும், நத்தையுமென இவை மகிழும்.நீர் தெளிவாகத் தோன்றும். மீனினம் வளர்ச்சி யடையும். மேகம் சூற்கொள்ளும். சந்தனம், சிறு சண்பகம், செம்பரத்தை, நாணல் ஆகியவை மலரும். ஈண்டுக் கூறாத பறவைகளும், விலங்குகளும் மக்கட் டொகுதியுடன் வருந்தும். இவையே கூதிர்ப் பருவத்தின் தன்மைகளாகும்.

கைக்கிளை நிகழுங்காலம் :

களவிற் புணர்ச்சிக்கு முன் கைக்கிளை நிகழும்.

கைக்கிளை :

அகப்பொருள் வகை ஏழனுள் ஒன்று. ஒருதலைக் காமம் எனப்பட்டுத் தலை மகன் கூற்றாய் நிகழ்வது. காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என்னும் நால்வகையானும் கூற்று நிகழும். கைக்கிளையில் நிகழும் உரிப்பொருள் :

தலைமகளைப் பார்த்தவிடத்துத் தலைமகனுக்கு ஏற்பட்ட மனநிகழ்ச்சி உள்ள நிலைமையும், பிறகு தலைவியின் குறிப்பு அறியும் வரையிலும் நிகழும் நிகழ்ச்சியும், தலைவியை எதிரிட்டுக் காணுதலும் ஆகிய நிகழ்ச்சிகள் கைக்கிளையில் நிகழும் உரிப் பொருளாம்.

கைக்கிளையின் வகை :

காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் ஆகிய நான்கும் கைக் கிளைத் திணையின் வகைகளாகும்.