உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

207

கண்டவிடத்து மகிழ்தல்; தலைமகன் பெயர் கேட்டு மகிழ்தல்; மனங்கலங்குதல் என்பன பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு களாகும்.

பெருமிதம் :

பெருமிதமானது கல்விச் சிறப்பு, தறுகண்மை, புகழ்மை, கொடைத்தன்மை என்று சொல்லப்பட்ட நான்குவகைகளாலும் உண்டாகும். பெருமிதம் - தன்னைப் பெரியனாகமதித்தல். இவற் றுள் கல்வியென்பது-தவம் முதலாகிய வித்தை. தறுகணென்பது- அஞ்சத்தக்கன கண்டவிடத்து அஞ்சாமை. புகழ்மை யென்பது- ன்பமும் பொருளும் மிகுதியாகக் கிடைப்பினும் பழியொடு வருவன செய்யாமை, கொடையென்பது-உயிரும் உடம்பும், உறுப்பும் முதலிய எல்லாப் பொருளுங் கொடுத்தல்.

பெரும் பொழுதின்வகை :

கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக் காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என பெரும் பொழுது அறுவகைப்படும்.

இவற்றுள், ஆவணித்திங்களும், புரட்டாசித்திங்களும் கார் காலமாகும். ஐப்பசித்திங்களும், கார்த்திகைத் திங்களும் கூதிர் காலமாகும். மார்கழித்திங்களும், தைத்திங்களும் முன்பனிக் காலமாகும். மாசித்திங்களும் பங்குனித்திங்களும், பின்பனிக் காலமாகும்; சித்திரைத் திங்களும், வைகாசித்திங்களும் இளவேனிற் காலமாகும். ஆனித் திங்களும், ஆடித்திங்களும் முதுவேனிற் காலமாகும்.

பொருள்வயிற் பிரிவு :

தலைமகன் பொருள் ஈட்டுதல் காரணமாகப் பிரியும் பிரிவு பொருள்வயிற் பிரிவாகும். இப்பிரிவு அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வர்க்கும் உரித்தாம். இப்பிரிவு ஓராண்டுக் காலவெல்லையினையுடையது.

போக்கறிவுறுத்தல் : (அ)

இது உடன்போக்கிடையீட்டி ன் கைகளுள் ஒன்று. ஐம்பத்தாறாம் நாள் தன்னூரை விட்டு நீங்குந் தலைவி எதிர் வந்தவர்களைத் தலைவனுடன் தான் செல்லுதலைத் தோழியர்க்கும் நற்றாய்க்கும் உணர்த்த அனுப்புதலும், அந்தணர்கள் தலைவியின் செலவை நற்றாய்க்குக் கூறுதலுமாம்.