உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

401

பதிற்றந்தாதி

பத்து வெண்பா, பத்துக் கலித்துறை, பொருட்டன்மை தோன்ற அந்தாதி முறையிற்பாடுவது பதிற்றந்தாதியாகும். பதிற்றுப் பத்தாந்தாதி என்பதும் இதுவே.

பயோதரப் பத்து

முலையைப் புகழ்ந்து பத்துச் செய்யுட்கள் பாடுவது பயோ தரப் பத்து எனப்பெறும். பயோதரம்-முலை.

பரணி

போர்முகத்திலே ஆயிரம் யானையைக் கொன்ற வீரனைத் தலைவனாகக் கொண்டு, கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, பாலை நிலம், காளி கோயில், பேய்களோடு காளி, காளியோடு பேய்கள் கூறத் தான் சொல்லக் கருதிய தலைவன் புகழ்விளங்க அவன் வழியாகப் புறப்பொருள் வெம்போர் வழங்க விரும்பல் ஆகிய வெல்லாம் இருசீரடி முச்சீரடி ஒழித்து ஒழிந்த மற்றடியாக ஈரடி பலதாழிசையாற் பாடுவது பரணியாகும். (வெண் கலிப்பாவாலும் பாடலாம்)

எடு:- கலிங்கத்துப் பரணி.

பல்சந்த மாலை

பத்துப் பத்துச் செய்யுள் வெவ்வேறு சந்தமாக நூறு பாடல்கள் பாடுவது பல் சந்தமாலையாகும்.

பவனிக்காதல்

பவனி வந்த தலைவன் மீது காதல் கொண்ட தலைவி தோழியிடந் தான் வருந்துவதாகக் கூறுங் கூற்றாகப் பாடுவது பவனிக் காதல்.

பன்மணிமாலை

கலம்பகத்திற்குக் குறித்த ஒருபோகும் அம்மானையும் ஊசலுமின்றி ஏனையவுறுப்புக்களெல்லாம் வரப்பாடுவது பன்மணிமாலையாம்.

பாட்டு

இஃது ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்று நான்கு வகைப்படும். (கடும்பா, இன்பா, சித்திரப்பா, விரிபா) பாதாதிகேசம்

கலிவெண்பாவால் கால்முதல் மயிர் முடிவரை பாடுவது பாதாதிகேசம் எனப் பெறும். (அடி முதல் முடி)