உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

4 இளங்குமரனார் தமிழ்வளம்

பாயிரத்தின் பெயர்கள்

முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை, என்பன பாயிரத்தின் பெயர்களாம். முகவுரை-நூற்குமுன் சொல்லப் படுவது; நூன்முகம் என்பதும் அது. பதிகம் என்பது-பொதுப்பாயிரத்திற்குரிய ஐந்தையும் சிறப்புப் பாயிரத்திற்குரிய பதினொன்றையும் தொகுத்துக் கூறுவது. அணிந்துரை என்பது-நூலின் பெருமைகளை விரித்துக் கூறுவது.புனைந்துரை என்பதும் அதுவே. புறவுரை என்பது-நூல் சொல்லிய பொருள் அல்லாதவைகளைச் சொல்லுவது. தந்துரை என்பது-நூலிலே சொல்லப்பட்ட பொருளல்லாதவை களை அதற்குத் தந்து சொல்லுவது.

பாயிரத்தின் வகை

பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம், என பாயிரம் இரு வகைப்படும்.

பிள்ளைக்கவி:-

இஃதிந்நாளில்

பிள்ளைத் தமிழ் என்று வழங்கப் பெறுகிறது. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர், ஆகியவை களை முறையே ஆசிரிய விருத்தத்தால் பத்துப் பத்தாகக் கூறுவது ஆண்பாற்பிள்ளைக் கவி. இவ்வுறுப்பில் இறுதி மூன்றை யொழித்துக் கழங்கு, அம்மானை, ஊசல், என்பவைகளைக் கூட்டிக் கூறுவது பெண்பாற்பிள்ளைக்கவி.

பிறந்த மூன்றாந்திங்கள் முதல் இருபத்தொரு திங்கள் வரை யிலும் ஒற்றித்ததிங்களில் முழுத்திங்கள் பக்கத்தில் பிள்ளைக் கவியை விரும்புக. மூன்றாமாண்டினும் ஐந்தாமாண்டினும் ஏழாமாண்டினும் கொள்ளவும் பெறும். காப்பு ஒன்பது பாட்டாலும் பதினொரு பாட்டாலும் பாடப்பெறும். நிலங்கள் பத்துந்தம்மில் ஒப்பக் கொண்டு பாடுமிடத்தில் ஒற்றைப்படப் பாடுதல் சிறப்புடையது. இரட்டிக்கப் பாடுமிடத்தில் ஓசை பெயர்த்துப் பாடவேண்டும். காப்பு முதற்கண்ணெடுத்த ஆசிரிய விருத்தம் நான்கடிக்கும் எழுத்தொப்பப் பாடுதல் வேண்டும். புகழ்ச்சிமாலை

அகவலடியும், கலியடியும், வந்து மயங்கிய வஞ்சிப் பாவால் பெண்களின் சிறப்பைக் கூறுவது புகழ்ச்சி மாலையாகும்.